Pages

.

.

Monday, January 30, 2017

பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா..?

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மு.கா உறுதியான தடம் பதித்ததொரு கட்சியாகும்.தற்போது இக் கட்சியினுள் தோன்றியுள்ள உட்கட்சி பூசல்களின் காரணமாக இக் கட்சி பல கூறுகளாக பிளவுறும் நிலைக்கு சென்றுள்ளது.ஒரு கட்சிக்கு தேசியப் பட்டியல் கிடைத்துவிட்டால் அதனைப் பறித்துண்ண பட்சிகள் பல படை எடுக்கும்.இதில் முட்டி மோதி மூக்குடையும் பட்சிகள் இந்த பழம் புளிக்கும் என்ற பாணியில் விலகிச் சென்றாலும் தேசிய பட்டியலை தனக்கு வழங்காத கட்சியின் தலைமைக்கு எதிராக வசைபாடுவது வழக்கம்.

1989ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை பாராளுமன்ற அரியாசனத்தில் கம்பீரமாக உட்கார்ந்து வரும் பஷீர் சேகுதாவூத் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எவராலும் சிறிதேனும் கவனத்திற் கொள்ளப்படாது அரசியல் அநாதையாக்கப்பட்டிருந்தார்.ஒரு தடவை ஈரோஸ் அமைப்பிடமிருந்தும் மூன்று தடவைகள் மு.காவின் தேசியப்பட்டியலையும் சுவைத்த பஷீர் சேகுதாவூத் 2010ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாத்திரமே வெற்றிவாகை சூடி பாராளுமன்றம் சென்றிருந்தார்.முஸ்லிம் காங்கிரஸ் மூன்று தடவைகள் பஷீர் சேகுதாவூதிற்கு தேசியப்பட்டியல் வழங்கியதாக கூறினாலும் 2001-2008 வரையே மு.காவின் தேசியப்பட்டியலை அவர் அலங்கரித்தார்.மூன்று தடவைகள் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக கூறும் போது அது பெரும் காலமாக தோற்றம் தருகின்றது.

பஷீர் சேகுதாவூத் 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வானத்திலிருந்து வந்தாவது பாராளுமன்றம் செல்வேன் என பகிரங்கமாக கூறியிருந்தார்.இவர் கடந்த தேர்தலில் மு.காவில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்லவே அதிகம் விரும்பினார்.அத் தேர்தலில் மு.காவின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு ஆசனம் வழங்கப்படவில்லை.கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.கா மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையே கைப்பற்றக் கூடிய நிலையிருந்தது.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கணிசமான வாக்குகளை பெறுமெனவும் நம்பப்பட்டது.இதில் கல்குடாவில் அமீர் அலியும் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும் பலமிக்கவர்களாக திகழ்ந்ததால் மு.காவின் பிரதான இலக்காக ஏறாவூர் இருந்தது.இந்த நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த பிரபலங்களான பஷீர் சேகுதாவூத்,அலி ஷாகிர் மௌலானா ஆகிய இருவரையும் களமிறக்கும் போது விருப்பு வாக்குகள் பிரிந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் அதி கூடிய வாக்குகளைப் பெற வாய்ப்பிருந்தது.இதன் காரணமாக மு.கா தனது வெற்றியை கருத்திற் கொண்டு இவர்கள் இருவரில் ஒருவரை களமிறக்குவது தான் சிறந்தது.

பஷீர் சேகுதாவூத் 2012ம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்,கடந்த வட மாகாண சபைத் தேர்தலில்,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.காவை மஹிந்தவின் காலடிக்கு கொண்டு சேர்க்க அதிகம் பிரயத்தனம் செய்தார்.2012ம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா தனது முடிவிற்கு வராததன் காரணமாக தான் வகித்த பிரதி அமைச்சர் பதவியை யாருக்கும் தெரியாமல் இராஜினமா செய்திருந்தார்.குறித்த பிரதி அமைச்சர் பதவியானது மு.காவிற்கு சொந்தமானதால் அதனை தான் நினைத்த போது இராஜினாமா செய்து தூக்கி வீசும் அதிகாரம் பஷீர் சேகுதாவூதிற்கில்லை.இதன் பிற்பாடு யாருக்கும் தெரியாமல் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சை அமைச்சர் ஹக்கீம் இலங்கையில் இல்லாத சந்தர்ப்பத்தில் பெற்றிருந்தார்.ஒரு கட்சியை சேர்ந்தவர் அமைச்சை அல்லது பிரதி அமைச்சை பெறுவதென்றால் அது கட்சியில் அனுசரணையில் இடம்பெற வேண்டும்.இந்த நடைமுறையை பஷீர் சேகுதாவூத் பின்பற்றாமை மு.கா கட்சியை காட்டிக் கொடுத்ததற்கு ஈடாகும்.எப்போதும் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் தான் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் இவ்வாறான பிரச்சினைகளும் எழத் தான் செய்யும்.இருந்தாலும் அதற்காக வேலிபாய்வதை ஏற்க முடியாது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மு.கா மைத்திரியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது இறுதிவரை மஹிந்தவிற்கு விசுவாசமாகவே இருந்ததோடு வாக்களிப்பிளிருந்தும் தவிர்ந்திருந்தார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்ஸ வெற்றி பெற்றிருந்தால் பஷீர் சேகு தாவூத் கோடிகளுக்குள் படுத்துறங்கிருருப்பார்.இங்கு நான் கூற வரும் விடயம் பஷீர் சேகுதாவூதை மு.காவிற்கு மாபெரும் துரோகமிழைத்தவராக நோக்கலாம் என்பதாகும்.

மேலே நான் குறிப்பிட்ட மு.காவிற்கு துரோகமிழைத்த அனைத்து விடயங்களிலும் பஷீர் சேகுதாவூத் மஹிந்த என்ற இரு நாமங்களும் ஒன்றிணைந்து வருகிறது.பஷீர் சேகு தாவூத் அரசியல் அநாதையாக்கப்பட்டமைக்கு அவர் கடைப்பிடித்த மஹிந்த சார்புக்கொள்கை பிரதானமானது என்பதை அறிந்துகொள்ளலாம்.பஷீர் சேகுதாவூத் மாத்திரம் தைரியமாக எழுந்து நின்று இவ்விடயங்களை கையாண்டதால் அது பகிரங்க துரோகமாக வெளியில் தெரிகிறது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பஷீருடன் சேர்ந்து கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமதும் வாக்களிப்பிற்குச் செல்லவில்லை.மு.காவின் தலைவர் கூட இறுதிவரை மஹிந்தவை ஆதரிக்கும் போக்கில் காணப்பட்டதாக அறிய முடிந்தது.தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் வரை மு.காவால் மைத்திரியை ஆதரவளிக்கும் முடிவு எடுக்க முடியாமல் இருந்ததென்றால் மு.காவின் உயர் பீடத்தில் மஹிந்தவிற்கு இருந்த செல்வாக்கை அறிந்துகொள்ளலாம்.எனவே,அமைச்சர் பஷீரை தூர வீசியமைக்கு மஹிந்த சார்பு கதையெல்லாம் காரணமல்ல.

இருந்த போதிலும் இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பஷீர் சேகுதாவூத் மு.காவிற்கு எதிராக செயற்பட்டது போன்று ஏனையவர்கள் செயற்படவில்லை.இந்தப் போக்கும் கர்வமும் நீடித்தால் அது அமைச்சர் ஹக்கீமிற்கு பெரும் சவாலாக அமைவதோடு தலைமைத்துவத்திற்கும் உலை வைத்து விடலாம்.அதிலும் குறிப்பாக கடந்த ஜானாதிபதி தேர்தலில் மு.காவை மஹிந்தவை ஆதரிக்கச் செய்ய பஷீர் தலைமையிலான அணியொன்று செயற்பட்டிருந்தது.மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்ஸ பஷீர் சேகுதாவூதை பலப்படுத்தி மு.காவைச் சேர்ந்த பலரிற்கு அமைச்சு,பிரதி அமைச்சு மற்றும் முதலமைச்சுக்களை வீசி எறிந்து தன் பக்கம் ஈர்த்து தனிக் கட்சியை அமைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பஷீர் சேகுதாவூத் கடைப்பிடித்த போக்கு அவரின் தனிப்பட்ட செல்வாக்கை மிகவும் பாதித்திருந்தது.இந்த சந்தர்ப்பத்தில் பஷீர் சேகுதாவூதை அடக்காமல் அவருக்கு அரசியலில் உயிர் அளித்தால் அதற்கு பிறகு அவரை அடக்குவது அவ்வளவு இலகுவானதல்ல.தான் எது செய்தாலும் அமைச்சர் ஹக்கீம் குனிந்து செல்கிறாரென தலை மீதும் ஏறிவிடுவார்.அரசியல் நிலைமைகள் எவ்வாறு மாறுமென்பதை ஒரு போதும் ஊகிக்க முடியாது.ஏறாவூரில் மு.கா மிகவும் பலமுற்றிருப்பதால் இவரை இச் சந்தர்ப்பத்தில் அடக்க முனையும் போது ஏதேனும் சவால்கள் ஏற்பட்டால் அதனை அமைச்சர் ஹக்கீமால் எதிர்கொள்ளவும்  முடியும்.பஷீர் சேகுதாவூதிற்கு இத்தனை அவமானம் புடை சூழ்ந்து கேலி செய்கின்ற போது அவரால் அமைச்சர் ஹக்கீமிற்கு ஊடக அழுத்தத்தை வழங்க முடிந்ததே தவிர தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்து அமைச்சர் ஹக்கீமை வீழ்த்த முடியவில்லை.பஷீர் சேகுதாவூத் மஹிந்தவிடம் அமைச்சை பெற முயன்றது போன்று சேவைகளையும் பெற்றிருந்தால் இவரை மக்கள் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடிருப்பார்கள்.

நெடுங்காலமாகவே அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட இரகசியங்கள் பஷீர் சேகுதாவூதின் மடியில் புதைந்து கிடப்பதான கதைகளும் மக்களிடையே காணப்படுகின்றன.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவர் வானத்திலிருந்து வந்தாவது பாராளுமன்றம் செல்வேன் எனக் கூறிய வார்த்தைகள் அமைச்சர் ஹக்கீமின் தன் மானத்திற்கு அதிகம் சவாலை ஏற்படுத்திருந்தது.மிகவும் தைரியமிக்க இக் கூற்றானது பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீமின் தனிப்பட்ட இரகசியங்கள் ஏதாவது புதைந்து கிடைக்குமா என்ற கருத்தை மேலும் வலுவாக்கியது.இந்த நிலையில் இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம்,தேசியப்பட்டியல் வழங்கினால் அமைச்சர் ஹக்கீமின் இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும்.தற்போது அமைச்சர் ஹக்கீம் பற்றிய தனிப்பட்ட இரகசியங்கள் எதுவும் தன்னிடமில்லை என பஷீர் சேகு தாவூத் கூறியுள்ளமை குறிப்பிடத்தகது.

ஏறாவூரில் அலி ஷாகிர் மௌலானா,முதலமைச்சர் நஸீர் அஹமத் என மு.காவிடம் மூன்று சம இடத்தில் வைத்து மதிக்கத்தக்க பிரபலங்கள் உள்ளன.இதில் நஸீர் அஹமத் முதலமைச்சராக இருப்பதால் பாராளுமன்றத் தேர்தலில் அவருடையை பக்கமிருந்தான பிரச்சினைகள் குறைவு.ஏனைய இருவரில் ஒருவருக்கே பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை மு.காவால் வழங்க முடியும்.இதில் மேலுள்ள பல பிரச்சினைகளில் பஷீர் சேகுதாவூத் சம்பந்தப்பட்டிருப்பதால் மு.காவின் வளர்ச்சி நலனை கருத்திற் கொண்டு அலி ஷாகிர் மௌலானாவை போட்டி இட வைப்பது பொருத்தமானது.என்னதான் இருந்தாலும் பஷீர் சேகுதாவூத் மு.காவின் ஆரம்ப காலப் போராளி.அலி ஷாகிர் மௌலான நேற்று மு.காவிற்குள் வந்தவர்.அலி ஷாகிர் மௌலானா,நஸீர் அஹமத் ஆகியோர் மு.காவிற்கு எதிராக நின்ற போது இவர்களை எதிர்த்து வரிந்து கட்டுக்கொண்டு நின்ற பஷீர் சேகுதாவூத் தற்போது ஆவர்களினால் பின்தள்ளப்பட்டமை சற்று சிந்திக்கத்தக்கதும் கூட.கல்குடாவில் அமீர் அலி,காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்,ஏறாவூரில் அலி ஷாகிர் மௌலானா மற்றும் நஸீர் அஹமத் ஆகியோர் மு.காவிற்கு எதிராக நின்ற போது பஷீர் சேகுதாவூத் சிறிது சளைத்திருந்தாலும் மு.காவை மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டும் துடைத்தெறிந்திருப்பார்கள்.

ஏறாவூரில் ஒரு முதலமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் என மு.காவின் பலம் கொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ள போது பஷீர் செகுதாவூதிற்கு தேசியப்பட்டியலை வழங்குவது மு.காவின் வளர்ச்சியிலும் எதிர் தாக்கத்தை செலுத்திவிடும்.கல்குடா போன்றவற்றில் தேசியப்பட்டியல் வாக்குறுதி இருப்பதால் மேலும் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடும்.இப்படி பல காரணிகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக பஷீர் சேகுதாவூதின் அரசியல் அடித்தளத்தை இருந்த இடம் தெரியாது அழித்துவிட்டது.இதற்குப் பிறகு பஷீர் சேகுதாவூத் அரசியல் அதிகாரங்களை பெறுவதற்கான சாதகத் தன்மை குறைவு.கடந்த தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் நினைத்திருந்தால் பஷீரிற்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியிருக்க முடியும்.அமைச்சர் ஹக்கீம் தகுந்த நேரம் காத்திருந்து ஆப்பைச் சொருகி பஷீரின் அரசியலை குழி தோண்டி புதைத்துவிட்டார்.தனக்கு ஒரு கண் போனாலும் பறவாயில்லை தன் எதிரிக்கு இரு கண்களும் போக வேண்டுமென பஷீர் தன்னை வீழ்த்திய ஹக்கீமிற்குகெதிராக யுத்தமொன்றை பிரகடனம் செய்துள்ளார்.தனது போராட்டம் பதவிக்கானதல்ல என்பதை நிரூபிக்க பிரதிநிதித்துவ அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.

பஷீர் செகுதாவூத் அமைச்சர் ஹக்கீமுடன் மிகவும் நெருக்கமானவர்.அமைச்சர் ஹக்கீம் மு.காவை பொறுப்பேற்று அவரையே செயலாளராக நியமித்திருந்தார்.அதன் போதெழுந்த எதிர்ப்புகளை தாங்க முடியாமல் அமைச்சர் ஹக்கீம் அவரை தவிசாளராக்கியது வரலாறு.2008ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மு.காவை வெற்றியடையச் செய்ய அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து பஷீரும் தேர்தலில் களமிறங்கினார்.இப்படி அமைச்சர் ஹக்கீமுடன் இணைந்து பல விடயங்களில் செயற்பட்டுள்ளார்.அமைச்சர் ஹக்கீமின் பலம்,பலவீனங்களை பஷீர் நன்கே அறிவார்.இதன் காரணமாக அமைச்சர் ஹக்கீம் பஷீரை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல.

பல முறை மு.காவின் பேராளர் மாநாட்டில் இவர் தவிசாளர் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.இருந்தாலும் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் இவரை தவிசாளரை விட்டும் நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.இவர் கட்சியின் தவிசாளர் என்ற பலமிக்க பதவியை தன்னகத்தே கொண்டுள்ள போதும் கட்சித் தலைவருக்கும்,கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு ஒரு சாதாரண பொது மகன் போன்று காலத்திற்கு காலம் ஏதாவதொன்றை எழுதிக்கொண்டிருக்கின்றார்.ஒரு கட்சிக்குள் பல பிரச்சினைகள் காணப்படும்.அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல் கட்சியை பலவீனப்படுத்தும்.தற்போதையை பஷீர் சேகுதாவூதின் செயற்பாடு கட்சியை பலவீனப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.இருப்பினும் அவருடைய வினாக்கள் நியாயமற்றவையென யாராலும் தூக்கி வீசப்படுபவை அல்ல.இவர் இவ்வாறான கேள்விகளை முன் வைக்கும் போது மு,காவின் உயர் பீட உறுப்பினர் என்ற வகையில் அக் கேள்விகள் சிலரிடையே மிகைத்த பெறுமானத்தை பெறுகின்ற போதும் அவரது கடந்த கால செயற்பாடுகள் காரணமாக சிலரிடம் குறைவான மதிப்பெண்களையும் பெறுகிறது.

ஒரு கட்சித் தலைவர் அல்லது கட்சி பிழையான பாதையில் பயணிக்கும் போது அதனை எதிர்கொள்ள சில படிகள் உள்ளன.முதலில் கட்சிக்குள்ளிருந்து மிருதுவாகப் போராட வேண்டும்.அதற்கு இயலாத போது கடிமான போக்குடன் போராட வேண்டும்.அதற்கும் இயலாத போது பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கும் இயலாத போது மாற்றுக்கட்சிகளுடன் இணைந்து கட்சியை அழிக்க அல்லது மீட்க போராட வேண்டும்.தற்போது பஷீர் சேகுதாவூத் மூன்றாவது படியில் நிற்கின்றார்.பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள்ளிருந்து போராடும் முதலிரண்டு போராட்டப் படிகளையும்  முன்னெடுக்காமை அவரது போராட்ட தன்மையை பலவீனப்படுத்துகிறது.குறிப்பாக கட்சிக்குள்ளிருந்து போராடும் வலிமையை பஷீர் சேகுதாவூத் இழந்தமை முதற் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமைக்கான காரணமாகவுமிருக்கலாம்.

பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளார்.அவற்றில் கரையோர மாவட்டத்தை மைத்திரியிடமிருந்து பெறுமாறு,அமைச்சர் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராக இருப்பதால் தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினையை தீர்க்க கோரி,தேசிய மாநாட்டை சில கொள்கைகளால் அலங்கரிக்கக் கோரி,ஹசனலியின் பதவி குறைப்பின் போது இடம்பெற்ற சில முறைகேடுகள்,தாறுஸ்ஸலாம் உரிமை பற்றிய கடிதங்களை முக்கியமானதாக குறிப்பிடலாம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பஷீர் சேகுதாவூத் மஹிந்தவை ஆதரித்ததால் தனது போக்கை மக்களுக்கு நியாயப்படுத்த வேண்டிய ஒரு தேவை உள்ளது.கரையோர மாவட்டத்தை அவ்வளவு இலகுவாக மு.காவால் பெற்றுக்கொடுக்க முடியாது.இவர் கூறியது போன்று மு.கா கரையோர மாவட்டக் கதையை தூக்கிப் பிடித்து மைத்திரியிடம் சென்றிருந்தால் மூக்குடைபட்டு வந்திருப்பார்கள்.இதன் போது மஹிந்தவும் மைத்திரியும் ஒன்று என்ற தோற்றப்பாடை எழுப்பி தன்னை மக்களிடையே மிக இலகுவாக நியாயப்படுத்தியிருப்பார்.இருப்பினும் கரையோர மாவட்டக் கோரிக்கை மு.காவின் பல நாள் கோரிக்கைகளில் ஒன்று.இதனை மு.காவை பெறச் செய்வதற்கான அழுத்தமாகவும் நோக்கலாம்.

தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினையுடன் தொடர்புடைய அமைச்சை ஹக்கீம் வைத்திரிந்ததால் அதனை தீர்க்கக் கோருவது நியாயமானது.இந்த வினாவை அவர் அளுத்கமை பிரச்சினையின் போது நீதி அமைச்சராக இருந்த ஹக்கீமை நோக்கி விடுக்காமையின் மர்மம் யாவரும் அறிந்ததே.இன்று குறித்த அமைச்சை வைத்திருப்பதால் அதனை செய்யும் நிலை இலங்கையில்லை.இவ்வாறான வினாக்கள் ஹக்கீமை நோக்கி எழுப்பப்படும் போது அது மக்களிடையே ஹக்கீமை இகழ்வதற்கான பிடியாக மாறும்.இது அவருடைய இயலாமையை தெளிவாக புடைபோட்டுக் காட்டும்.தேசிய மாநாடு என்பது கொள்கைகளால அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இதன் போது இவ்வாறான வினாக்களை விடுப்பது தன்னை உயர்ந்த அறிவாளியாகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் மக்களிடையே எடுத்துக் காட்டும்.இதில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை பிரகடனம் செய்யுங்கள் என்றால் பஷீரின் அறிக்கை  சாய்ந்தமருது மக்களிடையே அதிகம் தாக்கத்தை செலுத்தும்.பலரை தன் பக்கம் ஈர்க்கவும் வழி சமைக்கும்.

அமைச்சர் ஹக்கீமால் ஹசனலியின் பதவி குறைப்பு விடயத்தில் சில முறைகேடான வேலைகள் நடைபெற்றுள்ளதான கதைகள் ஊசலாடின.என்னதான் கதைகள் எழுந்தாலும் அங்கு இருந்த ஒருவர் அது பற்றி வெளிப்படையாக கூறும் போது அக் கருத்து மிகவும் கனத்த பெறுமானத்தை பெறும்.அமைச்சர் ஹக்கீம் இதனை கடிதமாக வரைந்து கையொப்பம் சேகரித்ததை கண்டித்து இரு மௌலவிமார்களை கட்சியை விட்டும் நீக்கி அவர்களை அவமானப்படுத்தியிருந்தார்.இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் உண்மையை அறிய வேண்டிய தேவை உள்ளது.அந்த வேளையில் அங்கு நடந்த சிலவற்றைக் குறிப்பிட்டு பஷீர்சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.பஷீர் சேகுதாவூத் என்ன நோக்கத்திற்காக கடிதம் எழுதியிருந்தாலும் அதன் உண்மைகளை மக்கள் அறிய அங்கிருந்த ஒருவர் பகிரங்கமாக வெளிப்படுத்துவது பொருத்தமானது.அந்தக் கடிதத்திற்கு இற்றை வரை மு.காவின் தலைவரிடமிருந்தோ அல்லது உயர்பீட உறுப்பினர்களிடமிருந்தோ மறுப்பில்லை.இதனை தவிசாளர் என்ற வகையில் பார்க்காது போனாலும் அவ்விடத்தில் இருந்த ஒருவர் என்ற அடிப்படையில் உண்மையை மக்களுக்கு விளக்கும் செயற்பாட்டை பஷீர் செய்திருந்தார்.

தற்போது பஷீர் சேகுதாவூத் தாருஸ்ஸலாம் பற்றி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.தாருஸ்ஸலாம் பற்றி பஷீர் மாத்திரம் கேட்கவில்லை.உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.தாருஸ்ஸலாம் சம்பந்தமாக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் அது தனது சொத்தென உரிமை கொண்டாடிய வரலாறுகளும் உள்ளன.தாருஸ்ஸலாம் மக்கள் சொத்து.அது பற்றி மக்கள் எந்த நேரமும் கேள்வி எழுப்பலாம்.அக் கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீம் மு.காவின் தலைவர் என்ற வகையில் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது.அண்மையில் சிரேஷ்ட ஊடகவியாளர் மீரா இஸ்ஸதீன் கூட கேள்வி எழுப்பியிருந்தார்.பஷீர் செகுதாவூதை தங்களது தவிசாளராக பார்க்காது ஒரு சாதாரண பொது மகானாக நினைத்தாவது இதற்கு அமைச்சர் ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்.பஷீர் பகிரங்கமாக மீடியாவில் கேள்வி கேட்டால் அதற்கு அமைச்சர் ஹக்கீமின் மடியில் கனமில்லை என்றால் அவரும் பகிரங்கமாக மீடியாவில் பதில் கொடுத்து பஷீரை மூக்குடைக்கலாம் அல்லவா.உயர் கூட்டத்திற்கு பின்னால் ஒழிக்க வேண்டிய அவசியமில்லை.

கடந்த உயர் பீடக் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பில் பலர் கேள்வி எழுப்பியும் இவ்வளவு நாளும் இது பற்றி எதுவும் கதைக்காத அமைச்சர் ஹக்கீம் திடீரென தாருஸ்ஸலாம் பற்றி வாய் திறக்கின்றார் என்றால் அது பஷீரின் கேள்விகளில் எழுந்த அழுத்தம் என்பதை அறிய முடிகிறது.சிலர் பஷீரின் கடிதங்களை அமைச்சர் ஹக்கீம் வாசியாது கிழித்து வீசியதாக கூறுகின்றனர்.பஷீர் அமைச்சர் ஹக்கீமிற்கு வழங்கிய கடிதத்தை வாசியாது போனாலும் விடயம் அமைச்சர் ஹக்கீமை சென்றடைந்துள்ளது.அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி விளக்கமளிக்கின்ற போது நிச்சயம் பஷீர் கேள்வி எழுப்புவார்.அந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீம் விடையளிக்க மறுத்தால் இது தொடர்பில் பஷீரின் பக்கம் ஆதரவுப் படை திரளாது போனாலும் அமைச்சர் ஹக்கீமை எதிர்க்கும் அணி உருவாக வாய்ப்புள்ளது.இதனால் அமைச்சர் ஹக்கீம் இவ்விடயத்தை மிக சாணக்கியமாக கையாள முனைந்திருப்பார் என்பது யாவரும் அறிந்ததே.

அமைச்சர் ஹக்கீம் தாருஸ்ஸலாம் பற்றி கதைத்து முடிந்தவுடன்,பஷீர் எழுந்து கேள்வி கேட்க முற்பட்டுள்ளார்.பஷீர் எந்தக் கேள்வியும் கேட்காது சிலரால் தடுக்கப்பட்டுள்ளார்.இதனைப் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள மு.காவின் உயர்பீட உறுப்பினர் றியால் அதனை வன்மையாக கண்டித்துள்ளார்.றியாலின் இக் கூற்றானது தடுத்தவர்கள் மீது பிழை என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலின் மீது குறி வைத்துள்ள றியால் இதனை கூறுகிறார் என்றால் அவர் இதனை எந்தளவு அநாகரிகமான செயலாக நினைத்திருப்பார்.பஷீரின் கேள்விக்கு பதிலளித்துவிட்டு மறு கேள்வி கேட்க முடியாதென்றால் பஷீரின் அக் கேள்விக்கு அமைச்சர் ஹக்கீம் பதிலளித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அமைச்சர் ஹக்கீம் பேச அனுமதியுங்கள் எனக் கூறியும் அதனை கேட்காது உயர் பீட உறுப்பினர்கள் பஷீரை தடுத்து நிறுத்தினார்களாம்.இங்கு ஒரு விடயத்தை விளங்கலாம்.அமைச்சர் ஹக்கீம் கூட பஷீர் இவ்விடத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளவரென கூறியுள்ளார்.தலைவர் அனுமதித்தும் தொண்டர்கள் எதிர்க்கின்றாகள் என்றால் கட்சித் தலைவரான அமைச்சர் ஹக்கீமிற்கு மரியாதை இல்லையா? சில வேளை இது அமைச்சர் ஹக்கீமால் திட்டமிடப்பட்ட ஒன்றாகவுமிருக்கலாம்.அமைச்சர் ஹக்கீம் தான் திட்டமிடவில்லை என்பதை நிரூபிக்க அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் போதுமாகும்.அமைச்சர் ஹக்கீம் சொல்வதை கிளிப்பிள்ளை போல் கேட்டுச் செல்ல வேண்டும் என்ற சர்வதிகாரம் தான் மு.காவின் தற்போதைய கொள்கையோ தெரியவில்லை.பஷீர் சேகுதாவூத் சமூகத்திற்கெதிராகவும்,மு.காவிற்கெதிராகவும் நடந்த போதெல்லாம்  கொதித்து எழாத மு.காவின் உயர் பீடம் மு.காவில் உள்ள சிலரது முகத் திரைகளை கிழித்தெறியும் கேள்விகளைக் கேட்டவுடன் கொதித்தெழுவது அதில் உள்ளவர்கள் எவ்வாறானவர்கள்  என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.கடந்த மு.காவின் உயர் பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் பற்றி அமைச்சர் ஹக்கீம் பூரணமாக விளக்கிவிட்டார் என்றால் அதனை பஷீர் சேகுதாவூதின் கேள்விகளோடு சம்பந்தப்படுத்தி ஒருவராவது பகிரங்கமாக வெளியிடுங்கள் பார்க்கலாம்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 01-09-2016ம் திகதி வியாழக் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 comments:

Post a Comment