Pages

.

.

Friday, February 3, 2017

மனச்சாட்சி இட்ட கட்டளைகள்

(பசீர் சேஹூதாவுத்.-மு.கா.கட்சியின் தவிசாளர்)


1979 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டத்தில் இணையுமாறும்,1994 இல் முஸ்லிம் காங்கிரசில் இணையுமாறும், 2000ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையில் இன்னாரோடு அடையாளம் காட்டுமாறும், 2004 இல் இருந்து அப்பாவி முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்யும் கனவான்களை அம்பலப்படுத்தும் ஆதாரங்களைச் சேகரிக்குமாறும், 2015 ஆம் வருடம் சமநிலை பேணுமாறும், 2016 இல் இருந்து என்னையும் எனது அரசியல் ஸ்தாபனத்தையும் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்குமாறும் எனது மனச்சாட்சி எனக்கு கட்டளையிட்டது. இக்கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தினேன். அல்ஹம்துலில்லாஹ் அனைத்திலும் ஹக்கன் அல்லாஹ் எனது முயற்சிகளுக்கு வெற்றிகளைத் தந்தான். 2017 இலும் வெற்றியை வழங்குவான் என நம்பி களமிங்கியுள்ளேன். இதனடிப்படையில்தான் முகப்புத்தகத்தில் கடந்த பதிவை இட்டேன்.

கடந்த எனது பதிவு பற்றி ஆதரவாகவும், எதிராகவும் பின்னூட்டம் இட்டவர்கள், எதிர் வினையாற்றி வெளியிலிருந்து எழுதியவர்கள், சந்தேகம் கொண்டு முகநூல் பக்கங்களில் பதிவுகளைச் செய்தவர்கள், மீண்டும் என்னைத் திட்டித் தீர்த்தவர்கள் ஆகிய அனைவரும், எனது அப்பதிவு 'பெரியவர்' தொடர்பானது என்பதை "ஐயந்திரிபுற" நம்பியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் கருத்துக்கள்  நிரூபித்து நிற்கின்றன. இது பெரியவர் எப்படிப்பட்டவர் என்பதை சமூகத்தில் உள்ள ஆண்கள் நூற்றுக்கு நூறு வீதம் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்ற திருப்தியை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களைச் சென்றடையச் செய்யும் வேலைத்திட்டம் கச்சிதமாக மேற்கொள்ளப்படும்.

அனைவரும் கருதியிருப்பது போல அறையில் ஆடிய ஆட்டங்களை அம்பலத்தில் ஏற்றுவது தொடர்பான எனது முந்தைய பதிவு பெரியவர் பற்றியது மட்டுமோ அல்லது ஒரேயொரு பெண் சம்மந்தமானது மட்டுமோ அல்ல, மேலும் பல பரிமாணங்களைக் கொண்ட விவகாரங்களை உள்ளடக்கியது என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்ததன் அடிப்படையிலேயே இந்தப்பதிவைச் செய்துள்ளேன்.

பணப்பரிமாற்றம், மக்கள் பிரதிநிதிகள் பலரின் கூட்டுக் குடி, கூட்டுக் குடித்தனம், விடுதிகளில் கூத்திகளுடனான கொண்டாட்டம், அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் அவசிய தருணங்களில் நமது "பண்டமாற்றுப் பதவிப் பணக்காரர்" பில் செலுத்த கூட்டமாக நம் பிராந்தியப் பிரதிநிதிகள் குடியும் கூத்தியுமாக குதூகலித்தமை, ஒரு பிராந்தியத் தலைவர் முன்னைய எண்ணெய் அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து அவர் வீட்டில் விஸ்கி அருந்தியது. முன்னணிப் போராளிக் குடும்பங்கள் சில பிரிவதற்கு காரணமாய் அமைந்த இச்சைக் காட்சிகள்,  (இது பெண்களை நூறு வீதம் புரிதலுக்கு உட்படுத்தும்)
உள்ளிட்டவை பல பரிமாணம் என்பதில் அடங்கும்.

கருணாநிதி கதை, வசனம் எழுதி சிவாஜிகணேசன் நடித்த அவரது முதல் திரைப் படமான பராசக்தியில் சிவாஜி நீதிமன்றத்தில் நின்று கொண்டு நிகழ்த்திய " கோயிலை இடித்தேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக " என்ற சுய விளக்க உரை போல் நானும் மக்கள் நீதி மன்றத்தின் முன்னால் நின்று கொண்டு "மஸ்ஜித்திற்குள் கறையான்கள் கூடு கட்டியிருப்பதனால் மஸ்ஜித்தை இடிக்க முடியாது, கறையான்களின் கூடுகளை இடித்துக் கூட்டித் தள்ளி தூய்மைப் படுத்த இவ்வளவு காலமும் தவறிய   மஹல்லாவாசிகளாகிய நாம் உடனடியாக  கடமையைச் செய்யத் துணிய வேண்டும்" என்று அறை கூவல் விடுப்பேன்.
மாபெரும் வெற்றியைத் தந்த 'மக்கள் நீதி மன்றத்தின் முன் முஸ்லிம் காங்கிரஸ்' என்ற 2000 ஆம் ஆண்டைய எனது வேலைத்திட்டம் தந்த அனுபவம் துணை நிற்கும், இன்ஷா அல்லாஹ்.

கீழே காணப்படும் புகைப்படம் AVT 771,
4 chennel, வீடியோ எடுக்கும் ஹார்ட் டிஸ்க் பொருத்திய அன்றைய நவீன கருவி. இதனுடன் ஒரு சட்டை பொத்தான் அளவு கமாரா உண்டு. கமராவை தேவைப்படும் எவ்விடத்திலும் எவரது கண்ணுக்கும் புலப்படாமல் வைக்க முடியும். இந்த கருவியை ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எந்த இடத்திலும் வைத்து வீடியோ பதிவைச் செய்ய முடியும். இன்று இதை விட அதி நவீன கருவிகள் சந்தையில் கிடைக்கும், ஆயினும் இந்த கருவி ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை என்னாலும் நண்பர்களாலும் என்றும் மறக்க முடியாது.

இக்கருவியை, 2004 ஆம் வருடம் சிங்கப்பூரில் இருந்து வாங்கி கஸ்டம்ஸ் சோதனைகளைத் தாண்டி எனக்கு  கொழும்பில் கொண்டு சேர்ப்பித்த வெள்ளவத்தை "வீடியோ ப்ளசம்" உரிமையாளர் சதா அண்ணனுக்கு எனது சமூகம் சார்பாக நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.

இன்று எமது தேசத்தின் சுதந்திர தினம்.அரசியல் வஞ்சனைக்குள் அகப்பட்டு அல்லலுற்று, இடுக்குக்குள் சிக்குப்பட்ட பலாப்பழம் போல வாழும் எனது  சிறுபான்மையிலும் சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் சுதந்திரத்துக்கான வாசல் இந்நாளில் திறக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.


0 comments:

Post a Comment