Pages

.

.

Thursday, February 2, 2017

மு.கா யாப்பு மீதான பார்வை – பகுதி(01)

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ஒரு விடயத்தை செய்வதற்கு அவர்களுக்குள் எப்போதும் தாங்கள் இயங்குவதற்குரிய விதி முறைகள் காணப்பட வேண்டும்.அது வாய் மூல பேச்சாக அமைவதை விட ஒரு எழுத்து மூல வரைபாக இருப்பதே மிகவும் சிறந்தது.அதுவே அக் குழுவை வழி நடாத்துகின்ற  ஒரு எழுத்துமூல ஆவணமாகும்.அவ் யாப்பை மீறி ஒரு குழு ஒரு சிறிய எட்டையும் வைக்க முடியாது.ஒரு அரசியல் கட்சிக்கென எப்போதும் ஒரு யாப்பு காணப்படும்.அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு யாப்பு உள்ளது.அந்த யாப்பு இன்று இயக்கத்தில் உள்ளதா? என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

*குர்ஆன் ஹதீத் அடிப்படையில் இயங்குதல்*

மு.கா யாப்பின் 1.3 கட்சியின் வழிகாட்டல்கள் எனும் பகுதியானது *“புனித குர்ஆனும் இறைதூதரின் பாரம்பரியங்களும் கட்சியின் அதியுயர் வழி காட்டல்களாக அமையும்”* என குறிப்பிடுகிறது.ஒவ்வொரு யாப்பும் பல சிறம்பம்சங்களை கொண்டிருக்கும்.மு.கா யாப்பின் சிறப்பம்சமாக இப் பகுதியை நோக்கலாம்.இவ் அத்தியாயமானது இது ஒரு முஸ்லிம் கட்சி என்பதை தெளிவாக கூறுகிறது.இவ் அத்தியாயத்தின் மூலம் மு.காவின் செயற்பாடுகள் அனைத்தும் குர்ஆன் ஹதீதிற்கு அமைவாக நடப்பதாக பொருள் வழங்கும் (ஒரு கட்சி எப்போதும் அதன் யாப்பை மீற முடியாது).மு.கா ஒரு விடயத்தை செய்கின்ற போது அவ்விடயமானது இஸ்லாமிய அடிப்படையில்  பிழையென முடிவு செய்யப்பட்டு மு.காவினால் அதற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாத போது அது இஸ்லாத்தில் உள்ளதாகவே பொருள் வழங்கும்.

மு.கா செய்யும் பிழையானது இஸ்லாத்தையே இழிவு படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால் இது தொடர்பில் மிகக் கடுமையாக அலசுவது கடமையாகும்.இப்போது மு.கா குர்ஆன் ஹதீதின் அடிப்படையில் தான் இயங்குகிறதா? என சிந்திக்க வேண்டும்.மு.காவின் 19வது தேசிய மாநாட்டில் பெண் பிள்ளைகளின் நடனம் இடம்பெற்றிருந்தது.இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? என்று கேட்டால் யாவரும் “இல்லை” என்றே பதில் கூறுவார்கள்.இது பற்றி யாருமே கேள்வி எழுப்பியதாக அறிய முடியவில்லை.இச் சந்தர்ப்பத்தில் ஒரு குழுவினர் கலீல் மௌலவியை நீக்கியது தொடர்பாகவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை நாடிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் கெசினோ சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது.இது இஸ்லாத்திற்கு முரணானது என்பதால் மு.கா ஓடிச் சென்று எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும்.மாறாக மு.கா ஓடி ஒழித்திருந்தது.இன்று மு.காவில் நடைபெறும் எந்த விடயமாக இருந்தாலும் அதில் குர்ஆன் ஹதீதிற்கு முன்னுரிமை வழங்குவதாக அறிய முடியவில்லை.முஸ்லிம்களின் திருமண  வயது அதிகரிப்பது இஸ்லாத்தின் ஷரீயாவிற்கு முரணானதென பலரும் கூறி வரும் நிலையில் யாரினுடைய கருத்தையும் உள் வாங்காது அமைச்சர் ஹக்கீம் இதற்கு ஆதரவான கருத்தை கூறி வருகிறார்.அதாவது இன்று மு.கா குர்ஆன் ஹதீதை அடிப்படையாக கொண்ட கட்சி என்ற மு.காவின் யாப்பின் பகுதி பல இடங்களில் மீறப்பட்டுள்ளது.இம் முறை மு.காவின் தேசியப்பட்டியல் தொடர்பான தலைவரின் வாக்குறுதியை எடுத்துக் கொண்டால் அது சாதாரணமாகவே மீறப்பட்டுள்ளது.இக் கட்சியை 16 வருடங்கள் வழி நடாத்துகின்ற அமைச்சர் ஹக்கீம் பல இடங்களில் கும்பிடு போட்டுள்ளார்.இது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.இது போன்று அவர் மீது சில தனிப்பட்ட விடயங்களில் இஸ்லாத்தை மீறியதான பல  குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம்.இக் கட்சியின் தலைவராக இஸ்லாமிய நெறி முறைகள் தவறாமல் வாழும் ஒருவரே பொருத்தமானவராவார்.

*இக் கட்சியின் உயர் பீடத்தில் பேரினத்தை சேர்ந்த ஒருவர் உள்ளார்.குர்ஆன் ஹதீதை உயர் வழி காட்டலாக கொண்ட ஒரு கட்சிக்கு பேரினத்தை சேர்ந்தவர் எந்த வகையிலும் பொருத்தமற்றவராகும்*.இவர் எப்படி ஒரு பிரச்சினைக்கு இஸ்லாமிய அடிப்படையில் வழி காட்டலை கூறுவார்? இவ்வாறான பிரச்சினைகளுக்காகத் தான் மர்ஹூம் அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கியிருந்தார்.தற்போது அதன் முகவரியையும் காண முடியவில்லை.

மு.கா குர்ஆன் ஹதீதின் அடிப்படையில் இயங்குவதாக யாப்பை வைத்துக் கொண்டு அதற்கு மாற்றமாக செயற்படுவது ஏனைய மதத்தவர்களுக்கு மத்தியில் குர்ஆன் ஹதீத் மீதான தவறான பார்வையை வழங்கிவிடும் என்பதால் இது விடயத்தில் மு.கா மிகுந்த கரிசனை கொள்ள வேண்டும்.அப்படி கரிசனை கொள்ள முடியாதென்றால் குறித்த பாகத்தை நீக்க வேண்டும்.இன்று மு.காவிற்குள் காணப்படும் பிளவுகளும் சில நாத்த ஊத்த பேச்சுக்களும் குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட கட்சி என்பதால் இஸ்லாத்தையும் இழிவுபடுத்துவதாகவே அமைகிறது.இது விடயத்தில்மு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.கா ஒரு தவறை செய்கின்ற போது அதனை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கடமையும்,உரிமையையும் இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல உலக முஸ்லிம்களுக்கே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரவுள்ள பாகம் *மஷூறா அடிப்படையிலான கட்சித் தீர்மானங்கள்*...........

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.



0 comments:

Post a Comment