Pages

.

.

Friday, December 30, 2016

இனவாதிகளின் கூற்று மைத்திரியின் ஆலோசனையானது

இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போது வில்பத்து சரணாலய பிரதேசத்தை மேலும் விரிவாக்கி,வனவிலங்குகள் வலயமாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இது மிகவும் ஆபத்தான அறிவிப்பு என்பதை எமது முஸ்லிம்கள் அறியாமல் உள்ளமை தான் மிகவும் கவலையான விடயம்.

மரிச்சிக்கட்டி,கரடிக்குழி,காயாக்குழி,பாலக்குழி,முசலி,கொண்டச்சி மற்றும் வேப்பங் குளம் ஆகிய பிரதேசங்கள் வில்பத்து வனத்திற்கு அப்பால் இருந்த  போதும் 2012ம் ஆண்டளவில் இரவோடு இரவாக வில்பத்து வன பரிபாலன சபையின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.இன்றும் குறித்த பிரதேசங்களில் அந்த மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று தடயங்கள் பலவுள்ளன.

இதற்கெல்லாம் இவ்வாட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்தனர்.தற்போது இப் பிரச்சினை முன்னர் இருந்ததை விடவும் சிக்கலான நிலைமைக்கு  சென்றுகொண்டிருக்கின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள் இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கியதை  உணர்ந்து கொள்ள பல நாட்கள் எடுக்கவில்லை.

இலங்கையில் யுத்தம் முடிந்த பிறகு வர்த்தமானி மூலம் வன பரிபாலன சபையின் கீழ் உள் வாங்கப்பட்ட பிரதேச மக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீள் குடியேறச் சென்ற போது அவர்கள் அங்கு குடியேறுவதில் சட்ட ரீதியாக சவாலுக்குட்பட்டனர்.அப்போது மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் அம் மக்களுக்கு காணிக் கச்சேரிகள் வைக்கப்பட்டு சட்ட ரீதியாக அரை ஏக்கர் காணி குடியிருப்பிற்கும் ஒரு ஏக்கர் காணி விவசாயத்திற்கும் வழங்கப்பட்டது.இருப்பினும்,இது வரையும் விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.ஜனாதியின் இவ்வாலோசனை செயற்படுத்தப்படுமாக இருந்தால் குறித்த மீள் குடியேறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறி மீண்டும் அகதி வாழ்க்கைக்கு திரும்பும் நிலை ஏற்படும்.மீண்டும் அகதி வாழ்விற்கு திரும்பும் நிலை எமது சமூகத்திற்கு ஒரு போதும் வந்து விடக் கூடாது.

இது தொடர்பில் பல குழுக்களிடமிருந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரி இவ் அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் பிடிக்குள் அவர் அகப்பட்டிருப்பதை தெளிவாக அறிந்து கொள்ளச் செய்கிறது.அவர் இனவாதிகளுடன் உரையாடிய சில நாட்களில் இந்த அறிவிப்பை விடுத்திருப்பதானது இனவாதிகளின் மகுடி வாசிப்பிற்கு இவர் படம் எடுத்தாடுவதை மேலும் துல்லியமாக்குகின்றது.இந் நிலை தொடர்வது மிகவும் ஆபத்தானது.இவ்விடயத்தை சிங்கள பத்திரிகைகள் தூக்கிப் பிடித்த இன்றைய தினமே ஜனாதிபதியும் தூக்கிப் பிடித்துள்ளமை பலமான நிகழ்ச்சி நிரல் ஒன்றில் கீழ் இவைகள் பேசப்படுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இதற்கு முன்பு வில்பத்துவில் காடு அழிக்கப்பட்டுள்ளமை உண்மை தான் என ஜனாதிபதி கூறி இனவாதிகளுக்கு தீனி போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்கள ஊடகங்கள் விமானத்திலிருந்து  புகைப்படமெடுத்து முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளை காடுகள் போன்று காட்ட முனைகின்றனர்.சாதாரணமாக உயரமான கட்டடங்களில் இருந்து மிகவும் உயரமான கட்டடங்கள் அற்ற பிரதேசத்தை அவதானித்தால் கூட கட்டடங்கள் மறைக்கப்பட்டு மரங்கள் மாத்திரம் காணக்கூடியதாக இருக்கும்.26வருடங்களுக்கும் மேலாக எதுவித பாவனையுமற்று கிடக்கும் இடத்தை விமானத்திலிருந்து அவதானித்தால் அது காடு போன்று காட்சியளிப்பதொன்றும் புதினமல்ல.

எனவே,ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன உடனடியாக தனது இவ் ஆலோசனையை மீளப் பெற வேண்டும்.அல்லாது போனால் எவ்வாறு மஹிந்த ராஜ பக்ஸ வீடு சென்றாரோ அந்த நிலை மைத்திரிக்கும் ஏற்பட மிக நீண்ட காலமாகாது.இதில் இலங்கை முஸ்லிம்கள் அரசியல் இலாபம் தேடுவதை விடுத்து சமூக சிந்தனையோடும் உணர்வோடும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முயற்சிப்பதே பொருத்தமானதாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment