Pages

.

.

Monday, December 26, 2016

ஹசனலி பதுங்குகிறாரா? பணிந்தாரா?

அரசியலில் இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.அரசியல் வாதிகள் இன்று அடித்துக் கொள்வார்கள் நாளை அணைத்துக் கொள்வார்கள்.இவர்களை நம்பி பின்னால் சென்றவர்கள் தான் மடையர்களாக திரும்புவார்கள்.மிக நீண்ட காலமாக அமைச்சர் ஹக்கீமிற்கும் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையில் ஒரு முரண்பாடு தோன்றியிருந்தது.இந்த முரண்பாடு கடந்த மு.காவின் பேராளர் மாநாட்டில் ஹசனலியின் செயலாளர்  பதவியின் அதிகாரங்களை குறைத்தமையை நேரடியாக கொண்டிருந்தாலும் மறைமுகமாக தேசியப்பட்டியல் பகிர்வும் அதில் தாக்கம் செலுத்தியிருந்தது.இந்த முரண்பாட்டை தொடர்ந்து ஹசனலியும் ஹக்கீமிற்கு எதிராக போர் முரசை கொட்டி யுத்தத்தை ஆரம்பித்திருந்தாலும் தற்போது தான் முன் வைத்த குற்றச் சாட்டுக்கள் பிழை என்ற பாங்கில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

#தீர்வை எட்ட கூடிய மு.காவின் உயர் பீடம்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 2016-12-15ம் திகதிக்குள் யார் மு.காவின் செயலாளர் என்பதை அறிவிக்குமாறு கூறியிருந்தார்.இதற்கு ஹசனலி தானே மு.காவின் அதிகாரமிக்க செயலாளர் என தேர்தல் ஆணையாளருக்கு கூறியிருந்தமையே பிரதான காரணமாகும்.இப்படி இருக்கையில் மு.காவின் உயர்பீடம் கடந்த 2016-12-14ம் திகதி பலத்த  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடியிருந்தது.அது முடிந்த பிறகு மக்கள் எதிர்பார்த்தளவு சுவாரசியங்கள் எதுவும் அதில் காணப்படவில்லை.ஹசனலி முன் வைத்த குற்றச் சாட்டில் முதன்மையானது கடந்த பேராளர் மாநாட்டில் உயர் பீட செயலாளராக  நியமித்தவரை அமைச்சர் ஹக்கீம் கட்சியின் செயலாளராக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார் என்பதாகும்.கடந்த 2016-12-14ம் திகதி இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் செயலாளர் நாயகமாக ஹசனலியையே நியமிக்க வேண்டுமென விவாதிக்கப்பட்டதாகவே அறிய முடிகிறது.உண்மையில் அங்கு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கிய விடயம் கடந்த பேராளர் மாநாட்டில் உயர்பீட உறுப்பினராக நியமிக்கப்பட்டவரை கட்சியின் செயலாளராக அமைச்சர் ஹக்கீம் நியமித்தாரா? இல்லையா? என்பதாகும்.அப்படியான விடயங்கள் அங்கு பேசப்படாமையிலிருந்து ஏதோ ஒரு மறைமுக நோக்கத்தை அடிப்படையாக கொண்டு  அமைச்சர் ஹக்கீம் குறித்த உயர் பீட கூட்டத்தை  கூட்டி கலைத்தார் என்பதாகும்.

குறித்த உயர்பீட கூட்டம் நடந்த மறு  தினம் ஹசனலி ஒரு உடன்பாட்டிற்கு வராது போய் இருந்தால் குறித்த உயர் பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காட்டி அனைவரும் அமைச்சர் ஹக்கீம் கூறுவதை ஏற்றுக்கொள்கிறார்கள்.இதுவே கடந்த யாப்பு மாற்றம் தொடர்பான உயர் பீடக்கூட்டத்தில் நடந்ததென அமைச்சர் ஹக்கீம் தேர்தல் ஆணையாளரிடம் நிரூபிக்க முனைந்திருக்கலாம்.இதனை கூட்டறிக்கையில் ஒரு சில விடயங்களை மறைமுகமாக உட்புகுத்துவதன் மூலம் இலகுவாக சாதித்திருக்க முடியும்.கடந்த மு.காவின் யாப்பு மாற்றத்தின் போது குறித்த உயர்பீட கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தாலும் ஹசனலி சார்பு அணியினர் தங்களது வாய்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தனர்.அதிலும் குறிப்பாக மு.காவின் தவிசாளரின் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.இவர் கடந்த காலங்களில் ஹசனலியின் பதவி குறைப்பு விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் திருவிளையாடல் இடம்பெற்றதாக பகிரங்கமாக கூறியவர்.இந்த நிலை ஹசனலி தோல்வியை நோக்கி நெருங்குவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அன்று யாராவது ஒருவர் கடந்த யாப்பு மாற்றம் தொடர்பான கூட்டத்தில் ஹசனலியே கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்ற விடயத்தை தூக்கி போட்டிருந்தால் அமைச்சர் ஹக்கீம் மாட்டிக்கொண்டிருப்பார் அல்லது சிலரது பொய் முகங்கள் வெளிப்பட்டிருக்கும்.அப்படி ஒரு விடயம் நடந்திருந்தால் குறித்த உயர்பீட கூட்டம் ஒரு முடிவின்றி நிறைவடைந்திருக்கும்.அமைச்சர் ஹக்கீம் சட்டரீதியாக  தேர்தல் ஆணையாளரிடம் ஒரு தீர்க்கமான முடிவு கூற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்.அக் கூட்டத்தின் கூட்டறிக்கை ஹசனலியின் வாதத்திற்கான வலுவான ஆதாரமாக அமைந்திருக்கும்.கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சில காலங்கள் வறிதாக்கப்பட்டிருக்கும் அல்லது ஹசனலியிடம் ஹக்கீம் மண்டியிட்டிருப்பார்.அக் கூட்டம் ஒரு சுமுகமான முறையில் நிறைவடைந்தமை ஹசனலி அணியை பலவீனமாக்கியதில் முதன்மை காரணியாகும்.இக் கூட்டத்தின் மூலம் அமைச்சர் ஹக்கீம் மு.காவின் உயர் பீடத்தில் தனக்குள்ள ஆதரவை வெளிப்படுத்தி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற செய்தியை வழங்குமுகமாகவும் ஏற்பாடு செய்திருக்கலாம்.அவ் உயர் பீட கூட்டம் நடைபெறுவதற்கு  சில நாட்கள் முன்பு ஹசனலி தனதில்லத்தில் ஒரு மக்கள் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.அதில் அவர் பலரது அனுதாபப் பார்வைகளை தன் பக்கம் திருப்பும் வகையில் தனது செயற்பாடுகளை அமைத்திருந்தார்.அக் கலந்துரையாடல் அவருக்கு வெற்றியையும் கொடுத்திருந்தது.இது ஹசனலி குறித்த உயர் பீட கூட்டத்தில் தனது பக்கம் வெற்றியை திருப்பச் செய்த ஒன்றாகவும் பார்க்கலாம்.

கட்சியின் செயலாளர் மாற்ற பிரச்சினையை அடிப்படையாக கொண்டு கூட்டப்பட்ட அக் கூட்டத்தில் அது பற்றி யாருமே கதைக்காமை அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக ஹசனலி,பஷீர் சேகுதாவூத் ஆகியோர் போலியான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தார்களா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது.இது தொடர்பில் இதற்கு முன்பு இக் குற்றச் சாட்டை அறிக்கையில் முன் வைத்த பஷீர் சேகுதாவூத் அச் சந்தர்ப்பத்தில் முன் வைக்காமை அவர் பக்க நியாயம் மிகவும் பலவீனமானதாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.குறித்த பிரச்சினை தொடர்பில் விவாதிக்க மு.காவின் தவிசாளர் பஷீர் செகுதாவூதிற்கு மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து அதனை பயன்படுத்த தவறியமையால் இதற்கு பிறகு அவர் இது தொடர்பில் கதைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.குறித்த பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கைகளில் சுட்டிக் காட்டாது அதற்கு தகுந்த இடங்களில் கதைக்க வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் பஷீர் சேகுதாவூத் போன்றோர் மீது முன் வைக்கும் குற்றச் சாட்டை இதன் மூலம் நியாயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான உயர்பீடக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம்  ஒரு யாப்பு மாற்றம் என்பது அடுத்த பேராளர் மாநாட்டில் தான் இடம்பெற வேண்டுமென்பதை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கவுள்ளதாக கூறுகிறார்.இது தேர்தல் ஆணையாளருக்கு தேவையற்ற விடயம்.அமைச்சர் ஹக்கீம் கடந்த வருடம் மாற்றம் பெற்ற மு.காவின் யாப்பின் பிரகாரம்  இவர் தான் கட்சியின் செயலாளர் என்று அறிவிப்பதையே தேர்தல் ஆணையாளர் எதிர்பார்த்திருந்தார்.இது அமைச்சர் ஹக்கீம் அந் நேரத்தில் மிகவும் தடுமாற்றமான நிலையில் இருந்துள்ளதை  அறிந்து கொள்ளச் செய்கிறது.மேலும்,அவர் கருத்து தெரிவிக்கையில் நாளை தலைவர் ஹசனலியுடன் தனிப்பட்ட முறையில் கதைப்பதற்கு தயாராகவுள்ளதாக எத்திவைக்கப்படவுள்ளதாக கூறி இருந்தார்.

தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர் நாயகம் யார் என்றே கேட்டுள்ளார்.இந் நிலையில் கட்சியின் உயர்பீடத்தை கூட்டும் அதிகாரம் செயலாளருக்கு இருப்பதால் இக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் சட்ட ரீதியானதல்ல.அக் கூட்டத்தின் முடிவுகளை அமைச்சர் ஹக்கீம் தனது வாதத்தை நியாயப்படுத்தும் ஒரு சிறு விடயமாக பயன்படுத்தலாமே தவிர பலத்த ஆதாரமாக கொள்ள முடியாது.

#ஹசனலி கலந்துகொள்ளாமையின் இரகசியம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூட்டப்பட்ட உயர்பீடக் கூட்டத்திற்கு ஹசனலி சென்றிருந்தால் அக் கூட்டம் ஒரு முடிவின்றி நிறைவடைந்திருக்கும் அல்லது தெளிவான முடிவொன்று எடுக்கப்பட்டிருக்கும்.அக் கூட்டத்தில்  ஹசனலிக்கு என்ன தேவை என்ற வினாவே முதல் எழுந்திருக்கும்.இங்கு ஹசனலிக்கு முழு அதிகாரமுள்ள செயலாளர் பதவி தான் தனது கோரிக்கை என்பதை தவிர வேறு எதனையும் கூற முடியாது.அப்படி அவர் கூறியிருந்தால் இல்லை இல்லை உங்களுக்கு அதனை தர முடியாதென அவர் முன்பு கூற யாருக்கும் தகுதியில்லை.தற்போது இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம்.இன்னும் சில நாட்களில் பேராளர் மாநாட்டை கூட்டி உங்களுக்கு முழு அதிகாரமுள்ள செயலாளர் பதவியை தருகிறோம் என்ற உறுதி மொழியை மு.காவின் உயர்பீடம் ஹசனலிக்கு வழங்கினால் ஹசனலி வேறு எதுவும் பேச முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்.இதனையும் எதிர்த்து கதைத்தால் அது மு.காவை எதிர்த்து பயணிக்க ஹசனலி முனைகிறார் என்ற தோற்றப்பாடு எழுந்து மு.காவி  உயர்பீடம் ஹசனலிக்கு எதிராக மாறியிருக்கும்.அங்கு சத்தம் போட்டு சண்டை பிடித்து தனது வாதத்தை முன் வைக்கும் பண்புடையவர் ஹசனலியல்ல.தனக்கு பதவி வேண்டுமென தான் கேட்பதா என்ற கூச்சத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருப்பார்.

ஹசனலி தேசியப்பட்டியலையும் குறி வைத்ததாக தனது காயை நகர்த்துவதால் தனது அக் கோரிக்கையை உயர்பீடத்தில் முன் வைப்பது மிகவும் ஆபத்தானது.இதற்கு தனிப்பட்ட இரகசிய சந்திப்புக்கள் தான் மிகவும் பொருத்தமானவை.கடந்த யாப்பு மாற்றத்தின் போது கட்சியின் செயலாளராக தானே தெரிவு செய்யப்பட்டேன் என்பதே ஹசனலியின் வாதம்.ஒரு உயர்பீடத்தை கூட்டும் அதிகாரம் கட்சியின் செயலாளருக்கே உண்டு.இக் கூட்டத்திற்கு  ஹசனலி செல்லுவதானது அவரே மன்சூர் ஏ காதர் கட்சியின் செயலாளராக ஏற்றுக்கொண்டதாக பொருள் கொடுக்கும்.இது ஹசனலியின் வாதத்தை நலினப்படுத்தும் விடயங்களாகும்.எனினும்,இதற்கு முன்பு கூட்டப்பட்ட உயர்பீடக் கூட்டங்களுக்கு  அவர் சென்றமை,அவர் மன்சூர் ஏ.காதரை அதிக்காரமிக்க செயலாளாராக ஏற்றுக்கொண்டமைக்கான ஆதாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஹசனலிக்கு பாதகமான முடிவுகள் எடுக்கப்படும் போது உயர் பீடத்தை கூட்டும் அதிகாரம் தனக்கே உண்டு.இது அங்கீகாரமற்ற உயர்பீடமென மிக இலகுவாக இதன் தீர்மானங்களை செல்லுபடியற்றதாக மாற்றியிருக்கலாம்.இவ்வாறான பலவற்றின் சிந்தனைகளால் ஹசனலி குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்திருக்கலாம்.

#ஹக்கீம்-ஹசனலி சந்திப்பு

இவ்விடயம் மிக இலகுவாக தீர்க்கப்பட அமைச்சர் ஹக்கீம் ஹசனலியுடன் பேசுவதை தவிர வேறு வழி இல்லை.இதன் காரணமாகத் தான் ஹக்கீமும் ஹசனலியுடன் தான் பேசத் தயார் என அறிவித்தார்.அமைச்சர் ஹக்கீம் தேர்தல் ஆணையாளர் காலக்கெடு விதித்த குறித்த நாளிற்கு முதல் நாள் உயர் பீடக் கூட்டத்தை கூட்டியதில் சில தந்திரோபாயங்கள் இருக்கலாம்.ஹசனலி தன்னுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராத போது அவர் தொடர்பில் ஒரு இறுதி முடிவை எடுப்பதே அதன் நோக்கமாகும் என்பதே பலரது ஊகமாக  இருந்தது.அல்லாது போனால் அதனை காலக்கெடு நெருங்கிய காலப்பகுதியில் வைக்க வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் ஹக்கீம் உயர்பீட கூட்டங்களில் கையாளும் ஒரு இராஜ தந்திரமாக பலரும் சுட்டிக்காட்டும் ஒரு விடயம் குறித்த நிகழ்விற்கு செல்வதற்கு முன்பு தனது ஆதரவாளர்கள் சிலரை நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டு செயற்படுவதாகும்.குறித்த உயர்பீடக் கூட்டத்தில் ஹசனலியை எதிர்த்து பேசும் நிலை இருக்கவில்லை.அது மாத்திரமல்ல குறித்த தினம் ஹசனலி அணியினரும் அமைதியை கடைப்பிடித்தனர்.இங்கு அமைச்சர் ஹக்கீம் ஹசனலி அணியினர் அவர்கள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு முன்பே  ஒரு சமரசத்திற்கு வந்துவிட்டதை அறிந்துகொள்ளச் செய்கிறது.

குறித்த பேச்சு வார்த்தையின் போது ஹசனலியிலிற்கு ஹக்கீம் தேசியப்பட்டியல் வழங்க இணங்கியுள்ளார்.அதனை உறுதி செய்யும் வகையிலான ஆதராங்களும் ஹசனலிக்கு காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.அதன் பிரகாரம் எதிர்வரும் 9ம் திகதி ஹசனலி பாராளுமன்றம் செல்லவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மிக விரைவில் மு.காவின் பேராளர் மாநாட்டை நடாத்தி அதில் ஹசனலிக்கு பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவியை வழங்க அமைச்சர் ஹக்கீம் இணங்கியுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.அநேகமான எதிர்வரும் பத்தாம் திகதி பேராளர் மாநாடு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#சமரசத்திற்கான கோரிக்கைகளின் பின் விளைவு

இதன் பிறகு அமைச்சர் ஹக்கீமுடன் ஹசனலி சமரசத்திற்கு வந்து தேர்தல் ஆணையாளரை சந்தித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.அமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் இவரை சமரசத்திற்கு கொண்டு வர தேசியப்பட்டியலை வழங்குவது தற்போதைய நிலையில் மிகவும் சுலபமான தீர்வு.இன்று அட்டாளைச்சேனை,வன்னி,கல்குடா,குருநாகல் போன்ற இடங்களில் தேசியப்பட்டியல் எதிர்பார்ப்புக்கள் மிகவும் பலமாகவுள்ளது.குறித்த இடங்களில் ஏதாவதொன்றிற்கு தேசியப்பட்டியல் வழங்கும் போது மற்றைய இடங்களிலிருந்து நிச்சயம் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பும்.ஹசனலிக்கு குறித்த தேசியப்பட்டியலை வழங்கும் போது தலைவர் நிர்ப்பந்தத்தினால் தான் தேசியப்பட்டியலை வழங்கியுள்ளாரென அவர்கள் தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள்.இருந்தாலும் இதனை அட்டளைச்சேனை மக்கள்  அவ்வளவு இலகுவில் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்கினால் அவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடலாம்.

அதே நேரம் அவர்களின் எதிர்ப்புக்கள் ஹசனலியையும் தாக்கும்.ஹசனலி ஒரு பதவி பித்தன் போன்ற தோற்றப்பாடு மக்களிடையே எழும்.எதிர்காலத்தில் இவர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக செயற்பட  சிந்தித்தாலோ அல்லது சமூகம் சார்ந்த ஏதாவது கருத்துக்களை முன் வைத்தாலோ  அது மக்களிடம் தாக்கம் செலுத்தாது.தற்போது ஹசனலிக்கு சார்பாக கதைத்த பலர் இவர் தேசியப்பட்டியலை ஏற்கப்போகிறார் என்றவுடன் அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.ஹசனலியும் கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா  பாறூக்கும் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் சந்தித்த பின்பே கிழக்கின் எழுச்சி உதயமாகி இருந்தது.அந்த கிழக்கின் எழுச்சியினரே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென அறிவித்துள்ளனர்.இதில் ஹசனலியின் மகன் முக்கிய காதாபாத்திரம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் ஹசனலி தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த பலரது ஆதரவை இழப்பார் என்பது வெள்ளிமடையான விடயம்.

#சமரசத்திற்கான கோரிக்கைகளின் மீதான பார்வை

அமைச்சர் ஹக்கீமிடம் ஹசனலியின் முதன்மை கோரிக்கையாக முழு அதிகாரமிக்க செயலாளர் பதவியே இருந்தது.பல வருடங்களாக அவர் வகித்த அப் பதவியை அவர் கட்சிக்கு எதிராக சிறிதும் செயற்படாத நிலையில் குறைத்தமை அவரை கேவலப்படுத்தியது போன்றாகும்.இதன் காரணமாக  அவர் தனக்கு பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவியை மீள கோருவது நியாயமானது.இது வழங்கப்படும் என்ற வாக்குறுதி அமைச்சர் ஹக்கீமிடம் இருந்து வழங்கப்பட்டாலும் இது வழங்கப்படுமா என்பது சந்தேகமே.அமைச்சர் ஹக்கீம் கட்சியின் யாப்பை மாற்றினாலும் கட்சியின் செயலாளரை தெரிவு செய்வது உயர்பீடத்தில் தங்கியுள்ள ஒரு விடயமாகும்.உயர் பீடத்தில் தனக்கு சார்பானவர்களை கிண்டி விட்டு அப் பதவியை ஹசனலி பெறாமல் செய்யலாம்.மேலும்,தற்போது ஹசனலி இவ்விடயத்தில் சமரசத்திற்கு வந்திருந்தாலும் ஹக்கீம் ஹசனலி மீது பூரண நம்பிக்கை கொள்ளவில்லை.பூரண நம்பிக்கையில்லாத நிலையில் பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவியை ஹசனலியிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது.

ஹசனலி தனது அறிக்கைகளில் அட்டாளைச்னைக்கே தேசியப்பட்டியலை வழங்குவது பொருத்தமானது எனக் கூறி,தான் தேசியப்பட்டியலுக்கு அலைபவனல்ல என்பதை நிரூபிக்க முனைந்திருந்தார்.தற்போது அவரே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க விடாமல் தன் வசப்படுத்துவாராக இருந்தால் அது சுயநலத்தின் உச்ச கட்டமாகும்.அது அட்டாளைச்சேனை மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று துரோகமாகவும் பதிவாகும்.பூரண அதிகாரமிக்க செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படாமல் அவர் தேசியப்பட்டியலை ஏற்பாராக இருந்தால் அவரது இத்தனை நாள் போராட்டமும் தேசியப்பட்டியலை அடைவதற்கே என்பது துல்லியமாகும்.அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான ஹசனலியின் போராட்டத்தில் அவரின் பின்னால் பலர் வராமைக்கான பிரதான காரணம் அதிகாரங்கள் அவரிடமில்லாமையாகும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்கும் போது அரசின் உயர் மட்டத்திலிருந்து அமைச்சு போன்ற அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.இதன் பிறகு அவர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக செயற்படும் போது அவருக்கு பின்னல் சிலர் தைரியமாக வருவார்கள் எனவும் ஹசனலி கணக்கு போட்டிருக்கலாம்.

#பிரச்சினை முடிந்ததா?

இதன் பிறகு ஹக்கீம்-ஹசனலி பிரச்சினை நிறைவுற்றதென கூற முடியாது.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியை வலிந்து  தேடிச் சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முனைகிறார்.அமைச்சர் ஹக்கீம் எங்குமே இந்தளவு கீழ் இறங்கவில்லை.இதுவே அமைச்சர் ஹக்கீமின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.நிச்சயாக அமைச்சர் ஹக்கீம் தனது தோல்வியை மறைக்க மிகவும் சாதூரியமான முறையில் ஹசனலியை வீழ்த்த முனைவார்.அது மாத்திரமல்ல ஹசனலி கோரிக்கைக்கு ஹக்கீம் அடிபணிந்தே ஹக்கீம்-ஹசனலி பிரச்சினை நிறைவுக்கு வந்துள்ளது.இது அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவ பதவிக்கு மிகவும் ஆபத்தானது.இதனை ஹசனலி அறியாமலுமில்லை.இருந்தாலும் மு.காவை விட்டு வெளியேறினால் அமைச்சர் ஹக்கீம் மிக இலகுவாக வென்று விடுவார்.இதன் காரணமாக மு.காவிவுள் இருந்து கொண்டே அமைச்சர் ஹக்கீமை வீழ்த்தும் போராட்டத்தை முன்னெடுப்பார் என்றே  நம்பப்படுகிறது.இருந்தாலும் அவர் தேசியப்பட்டியலை ஏற்காது மு.காவில் இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பாராக இருந்தால் அது மக்களிடையே அதிக தாக்கத்தை செலுத்தும்.ஹசனலியின் போராட்டம் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை நோக்கி அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.ஹசனலி மு.காவில் இருந்து கொண்டு இவ்வாறான விடயங்களை செய்யும் போது அமைச்சர் ஹக்கீம் பலத்த சவாலுக்குட்படுவார்.ஹசனலி பணியவில்லை பாய்வதற்கு பதுங்குகிறார் என்பது தான் ஆழமான உண்மை.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 26-12-2016ம் திகதி திங்கள்  கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 75வது கட்டுரையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment