Pages

.

.

Tuesday, June 13, 2017

பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத்

(ஹபீல் எம்.சுஹைர்)

இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது

“இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ”  என்பதே அச் செய்தியாகும்.

இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறான முன்னெடுப்புக்களை செய்வது இலங்கை நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இதனை செய்யும் முஸ்லிம் அரச தலைவர் இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்பை சம்பாதிப்பார் என்பதிலும் ஐயமில்லை. தற்போது அமைச்சர் றிஷாத் இவ்வரசின் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் தனது பதவிகளுக்கு ஆப்பாக அமைந்து விடும் என நன்கு அறிந்திருந்தும் தைரியமாக முன்னெடுக்கும் அவரது சமூக பற்றை பாராட்டாமல் இருக்க முடியாது.

அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களை முதன்மையாக கொண்டிருந்தால் இதனை அவர் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக பாதுகாத்திருக்க முடியும். இதன் மூலம் இவ்வாட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல பக்கங்களை கொண்ட அறிக்கையை 2014ம் ஆண்டு ஹசனலி கட்சி சார்பாக அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக இருந்த  நவநீதம் பிள்ளையிடம் ஒப்படைத்திருந்தார்.  இந்த விடயம் இரகசியமாக இருக்கும் என்று நினைத்தே செய்தார். இது பகிரங்கமாக அதனை தான் வழங்கவில்லையென ஹசனலியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் மாட்டிவிட்டு நல்ல பெயர் வாங்கியிருந்தார்.

இதன் மூலம் நான் கூற வருகின்ற விடயமானது அமைச்சர் றிஷாத் இந்த விடயத்தை தனது முக நூல் பக்கத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் அன்று அமைச்சர் ஹக்கீம் அதனை செய்தது தானல்ல என மறுத்து நல்ல பெயர் வாங்கி தனது பதவிகளை பாதுக்காத்தது போன்று செய்ய முடியாது என்பதாகும். இவ்விடயமானது அமைச்சர் றிஷாத் பதவி பட்டங்களுக்கு ஆசைப்பட்டவரல்ல என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

இப்படி ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத ஒரு தலைவரே எமக்கும் தேவையாகும்.


0 comments:

Post a Comment