Pages

.

.

Sunday, March 12, 2017

Raazi Muhammadh Jaabir   

இல்லை.நான் நிறுத்துவதாக இல்லை
===================================

பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; (28:20)

எமது ஈரல் குலையில் தண்ணீர் இல்லை எழுதாதே என்கின்றனர் பெற்றோர்.

உனக்கு மனைவியும்,குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடும் யோசித்து நட என்கிறார்கள் உறவினர்கள்.

மச்சான் உன்னை அமைதிப்படுத்த அவர்கள் எதுவும் செய்வார்கள் பார்த்து எழுதுடா என்கிறார்கள் சில நண்பர்கள்.

இவர் வாழ்வில் இழந்தவைகளை ஈடு செய்வதற்கும் பிரபலமாவதற்கும் எழுதுகிறார் என்கிறார்கள் சில ‘பால்ய நண்பர்கள்’.

இவரின் ஆக்கங்களை உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்காதீர்கள் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது என்று இணையத்தளங்களை வினயமாக வேண்டுகிறார்கள் சில உயர் மட்ட உறுப்பினர்கள்.

அல்லாஹ் உங்கள் பணிக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றட்டும் என்கிறார்கள் சில நலன்விரும்பிகள்.

உனக்கு வேறு வேலையே இல்லையா?தனிப்பட்டவர்களின் மானத்தை பொதுத்தளத்தில் வாங்குகிறாயே தூ நாயே,நிறுத்து என்கிறார்கள் சில காங்கிறசின் அடிமட்ட அறிவாளிகள்.

இல்லை.நான் நிறுத்துவதாக இல்லை.இந்தப் பத்ரில் ஒன்று உங்கள் கூட்டத்தில் இருக்கும் அபூ லஹபும்,உத்பாவும்,ஷைபாவும் அழிய வேண்டும் அல்லது எங்கள் கூட்டத்தில் இருக்கும் அபூபக்கரும், உமரும்,அலியும் அழிய வேண்டும்.அது வரைக்கும் நான் நிறுத்துவதாக இல்லை.

என்னைப்பற்றி விசாரிக்கிறீர்கள்.எனது குடும்பம் எங்கே இருக்கிறது என்று விசாரிக்கிறீர்கள்.நான் எங்கே இருக்கிறேன் என்று விசாரிக்கிறீர்கள்.எனது குழந்தைகள் எங்கே என்று விசாரிக்கிறீர்கள்.எனது இறந்த காலங்களை அவிழ்த்துப் பார்க்கிறீர்கள். என்னைப் பற்றி ஏதாவது சிக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.என்றாலும் நான் நிறுத்துவதாக இல்லை.

அன்று முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும்போது அதாவுல்லாஹ் மஹிந்தவை ஆதரித்து நின்றார் என்ற ஒரே காரணத்திற்காக நான் அதாவுல்லாவை எதிர்த்து நின்றேன்.நீங்கள் விழுந்தடித்துக் கொண்டு என்னை வாழ்த்தினீர்கள்.அதாவுல்லாஹ்விற்கு எதிராக நான் எழுதிய கவிதைகளை அச்சடித்து பள்ளிவாசல்களில் பகிர்ந்தீர்கள். அதாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் அன்று என்னை விமர்சித்தபோது நீங்கள் என்னைப் பாதுகாத்தீர்கள்.அவர்கள் எனது குடும்பத்தை விமர்சித்தபோது அதற்குப் பதிலளித்தீர்கள்.
இன்று நீங்கள் பூக்கள் போட்டுப் பூஜிக்கும் உங்கள் தலைவனுக்கு எதிராக நான் பேனையை உயர்த்தியதும் அன்று தட்டிக் கொடுத்த நீங்கள் இன்று தள்ளிவிடுகிறீர்கள்.பூக்கள் தூவி,பொன் கம்பளம் விரித்து வரவேற்ற நீங்கள் இன்று உங்கள் தலைவரை விமர்சிக்க ஆரம்பித்தவுடன் நான் போகும் வழியில் சேற்றைக் கரைத்துக் கொண்டு காத்திருக்கிறீர்கள்.அன்று என்னைக் காத்து நின்ற உங்கள் கேடயங்களை வளைத்து வில்லாக்கி என்னை விரட்டி வருகிறீர்கள்.நீங்கள் எத்தனை சந்தர்ப்பவாதிகள்.ஆனாலும் நாம் நிறுத்துவதாக இல்லை.

இன்னுமின்னும் உங்கள் தலைவனின் அனைத்து அரசியல் தவறுகளையும் நீங்கள் சகித்துக்கொண்டு போனால்,

நேற்று மாணிக்கமடுவின் மலையில் வைக்கப்பட்ட சிலை நாளை உங்கள் பள்ளியின் மிம்பரருகில் வந்து உட்காரும்.அது வரைக்கும் உறங்கிக் கொண்டிருங்கள்.ஆனால் நாம் நிறுத்துவதாக இல்லை.

நேற்று பர்தாவைக் கட்டிக்கொண்டு பரீட்சை எழுத முடியாத உங்கள் தங்கை நாளை பர்தாக் கட்டிக்கொண்டு பாதையில் போக முடியாமல் இருக்கும்.அதுவரைக்கும் சிரித்துக்கொண்டிருங்கள். நாம் நிறுத்துவதாக இல்லை.

நேற்றுப் பறிக்கப்பட்ட உங்கள் காணியை மீட்டெடுக்க முடியாமல் நாளை உங்கள் வயலில் விளைந்த நெல்லை நீங்களே விலைபேசி வாங்க வேண்டிய நிலை வரும்.அதுவரைக்கும் அமைதியாக அமர்ந்து கொண்டிருங்கள்.

கறையான்கள் அரித்த வளைகளைப் போல் உங்கள் அரசியல் உரிமைகள் அறுந்து விழும்.ஒரு கையில் உங்கள் தந்தையின் சடலத்தையும் மறு கையில் மண் வெட்டியையும் வைத்துகொண்டு ஆறரடி நிலம் தேடி அலைந்து திரிவீர்கள்.அதுவரைக்கும் ஆடிக்கொண்டிருங்கள்.

உங்களை விற்ற காசில் மலையில் ஒரு கோயில் கட்டி திறப்பு விழாவிற்கு ஹக்கீம் உங்களை அழைப்பார்.தீர்த்தத் தண்ணீரோடு தரிசித்துவிட்டு வரும் வரைக்கும் அடங்கிக் கிடங்கள்.ஆனால் நாம் நிறுத்துவதாக இல்லை.

இதற்கு யாராவது முடிவுகட்ட வேண்டும்.அது நானாக இருந்துவிட்டுப்போகிறேன்.நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள்.

அந்தக் கட்டிடத்தை நானே இடித்து விடுகிறேன்.அதன் இடிபாடுகளுக்குள் நான் இறந்தும் விடுகிறேன்.நீங்கள் நிம்மதியாக வெளியேறுங்கள். ஆனால் நான் நிறுத்துவதாக இல்லை.

அதிகம் என்ன செய்வீர்கள். ஆள் வைத்து தூக்குவீர்கள்.வீட்டை இடிப்பீர்கள்.பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவீர்கள். யாராவது பெண்ணோடு இணைத்துச் சொல்வீர்கள்.என் விரலை உடைத்து,நாக்கை அறுப்பீர்கள். அவ்வளவுதானே.மிஞ்சி மிஞ்சிப் போனால் கொலைதானே செய்வீர்கள்.கொன்று விட்டுப் போங்கள்.நான் நிறுத்துவதாக இல்லை.

எதிர்ப்புகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் ஏன் எதிர்ப்பவனை எதிர்க்கிறீர்கள்.ஏலுமென்றால் என்னோடு மோதாமல் என் கருத்துகளோடு மோதுங்கள் பார்ப்போம்.இதுவரைக்கு நான் உங்கள் தலைவரைப் பற்றி எழுதிய ஒன்று தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்.உங்கள் தலைவரைப் பற்றி இட்டுக்கட்டிச் சொல்கிறேன் என்று ஒரு ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டுங்கள் பார்க்கலாம்.அதற்கு முடியாது உங்களால்.

அதிகார வெறிகொண்ட நீங்கள் எனக்கு என்ன செய்வீர்கள் என்றும் தெரியும்.மீள முடியாத ஒற்றையடிப்பாதையில் நான் தனியே பயணிக்கிறேன் என்றும் எனக்குத்தெரியும். பரவாயில்லை.என்னை எரித்த வெளிச்சத்திலாவது உங்கள் குழந்தைகளின் இரவுகள் ஒளிரட்டும்.நான் நிறுத்துவதாக இல்லை.அநீதிகளை எதிர்த்துப் போராடிவிட்டு நிம்மதியாக இந்த உலகத்தில் வாழ்ந்த ஒருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் ஒரு வால் நுனியை மாத்திரம் காட்டியதற்கே அந்த ஓநாயின் ஒட்டுண்ணிகளுக்குத் தாங்கவில்லை  என்றால் எங்கள் நரம்பை உறுஞ்சும் அந்த ஓநாயின் ரத்த வாடை கொண்ட வேட்டைப் பல்லைக் காட்டினால் என்ன செய்வார்களோ? பொறுத்துப்பாருங்கள்.நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

அன்று இப்னு தைமியா சொன்ன பதிலைத்தான் இன்று உங்களுக்குச் சொல்கிறேன்.

“எனது எதிரிகளால் எனக்கு என்ன செய்துவிட முடியும்.எனது சுவனமும் எனது தோட்டமும் என் நெஞ்சுக்குள்ளே இருக்கின்றன.நான் செல்லுமிடமெல்லாம் என்னை விட்டுப் பிரியாமல் அவை என்னுடன் கூடவே வருகின்றன.எனக்கு சிறைவாசம் என்பது இறைவனோடு நான் தனியே இருப்பதாகும்.நான் கொல்லப்படுவது ஷஹாததாகும்.எனது மண்ணிலிருந்து நான் விரட்டப்படுவது எனது ஆன்மீகப் பயணமாகும்.

ஓ அபூ ஜஹ்லின் குழந்தைகளே,

ஓ உத்பாவின் பேரர்களே,

ஓ ஷைபாவின் சிறுவர்களே,

நீங்கள் வாளோடும், வில்லோடும் எங்களிடம் வாருங்கள்.நாங்கள் வானங்களின் அரசனின் பெயரால் வருகிறோம்.

ஓ காங்கிறசின் கோலியாத்துகளே,

உங்களைக் கொல்வதற்கு தாவீதின் கற்கள் போதும்.

நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்.நாங்கள் உங்களை இனி விடுவதாய் இல்லை.


0 comments:

Post a Comment