Pages

.

.

Sunday, November 27, 2016

அமைச்சர் ஹக்கீம் பிச்சை போடவில்லை மக்கள் வைத்த நம்பிக்கையே!

பிரதியமைச்சர் சகோதரர் ஹரீஸ் அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரவேற்கதக்கது. காலத்திக்கு ஏற்ற உரையாகவும் அது அமைந்தது அதற்காக முதற்கண் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கெளரவ பிரதிமைச்சரே இன்று நம் நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பல விதமான இனவாத குழுக்கள் பல கோணத்திலும் விஸ்பரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நீங்கள் ஒன்றும் அறியாத விடமல்ல.

இந்த நேரத்தில் உங்கள் பேச்சு ஒரு ஆறுதலாக இருந்தாலும் அது எந்தளவுக்கு நமது சமூகத்துக்கு வெற்றியை கொடுக்கும் என்பது  கேள்வியாகத்தான் உள்ளது.

இருந்தும் இனவாதிகளால் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகளை ஒழுங்கான முறையில் ஒவ்வொரு முஸ்லிம் அமைச்சரும் வாய் திறந்து பேசினால் நமது சமூகம் தலை நிமிர்ந்து அச்சமில்லாமல் வாழும்.

அதற்கு தேவை பணமோ பதவியோ கட்சியோ அல்ல! ஒன்றுமை ஒன்றே போதும்.

அது உங்களைப் போல சமூக பற்றுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து முதலில் உருவாக வேண்டும்.

எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிக்கும் பணத்துக்கும் புகழுக்கும் விலை போகிறவர்களாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  அதனால் ஒற்றுமை என்பது வெறும் வாய் பேச்சில் மட்டுமே இருக்கிறதே செயல்வடிவில் பூச்சியமாகவே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதை மாற்று மத அரசியல்வாதிகளும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்  பதவிகளையும், பணத்தையும் கொடுத்தால் சோனியிடம் பேரம் பேசி விடயங்களை கட்சிதமாக சாதித்துக் கொள்ளலாம் என நம்புகிறார்கள் செய்து காட்டியும் உள்ளார்கள்.

அதனால்தான் எம் சமூகத்தை பல விடயங்களில் சீண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளை நம்பி மக்களும் பின்னால் இருந்து கொண்டு.என்ன செய்வதென்று அறியாமல் "இளவு காத்த கிளி போல்" காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக ரீதியாக தீர்வு ஒன்று கிடைப்பதற்கு உரிய இடத்தில் பேச வேண்டும் என்று பாராளுமன்றம்,மாகாண சபை என்று அனுப்பினாலே! அவர்கள் கதிரைக்கு பாரமாகவும் சமூகத்துக்கு சுமையாகவும் இருந்து கொண்டு, தாம் விரும்பியதுபோல் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள்.
மக்களின் நிலமையோ அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

படைத்த இறைவன் எல்லோரையும் பாதுகாப்பான் என்பது கலிமா அது எங்கள் நம்பிக்கை ஆனாலும் வாக்களிக்கும் மக்களுக்கு தேர்தல் காலங்களில் நீங்கள் வழங்கிய  நம்பிக்கையூட்டலைத்தான் அவர்கள் செய்யுமாறு உங்களை வேண்டி நிற்கிறார்கள்.

ஒவ்வொரு மேடைகளிலும் நான் அதைச் செய்வேன் இதை தடுப்பேன் என்று ஆசை காட்டி பிச்சை எடுத்துச் சென்றவர்கள் நீங்கள் பிரச்சினை வரும்போது வேடிக்கை பார்த்து ஓடி ஒழிவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.

பதவிகளும் தலைமைத்துவமும் வெறும் பதவி முத்திரையுடன் முடிந்து விடுவதில்லை. மக்களால் கிடைத்த பதவியை மக்களுக்காக செலவு செய்யாவிட்டால் இங்குள்ள  ஒவ்வொரு மகனுக்கும் பதில் செல்லா விட்டாலும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதிகாரம் கிடைப்பதற்கு முன் எனக்கு அதிகாரத்தை தாருங்கள் வறுமையை ஒழிக்கிறேன். தொழில்களை பெற்றுத் தருகிறேன். பாதைகளை போடுகிறேன். பாலங்களை கட்டுகிறேன். என்றெல்லாம் வாய் கிழிய இரவு பகலாக மேடைகளில் கத்தி மக்களின் வாக்குகளை புத்திசாலியாக சாதுரியமாக எடுத்துக் கொண்டு பதவியில் அமர்ந்தவுடன் தனக்கு குடை பிடித்தவர்களுக்கு ஏதாவது கொடுத்து திருப்தி படுத்திக் கொள்ளுவதும். தன் வங்கி கணக்கை அதிகரித்துக் கொள்ளுவதும். கண் இருந்தும் குருடராகவும் காது இருந்தும் செவிடராகவும் இருப்பது உங்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

இதுதான்  இன்றுள்ள எமது அரசியல் தலைமைகளின் நிலமை. இதற்கு எந்த அரசியல்வாதியும் விதிவிலக்கல்ல.

கெளரவ பிரதியமைச்சர் அவர்களே உங்களிடம் சில விடயங்களை எத்தி வைக்க விரும்புகிறேன். நீங்கள் தலைவர் அஸ்ரப் அவர்களின் பாசறையில் அரசியல் செய்தவர் எப்படி மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும், எவ்வாறு உரிமையை பேச வேண்டுமென நன்கு கற்றுக் கொண்டவர் நீங்கள்.

அப்படி பட்ட உங்களுக்கு மக்கள் வாக்களித்து தகுதியையும் கொடுத்தது அவர்களின் தேவைகளையும், உரிமையையும் உரிய இடத்தில் உரிய நேரத்தில் பேசி பெற்றுக் கொடுப்பதற்காகவே.

உங்களின் ஆரம்பகால அரசியல் வருகையினை கண்டு மக்கள் ஆச்சரியப் பட்டார்கள் சந்தோசம் அடைந்தார்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களில் நானும்  உட்பட.

உங்கள் தைரியத்தையும் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள பதிப்பையும் மக்கள் செல்வாக்கையும் கண்டு பெருமை அடைந்தேன்.

ஆனால் இப்போது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அந்த பாதையை விட்டு விலகி சென்று யாரையோ திருப்தி படுத்துவதற்காக உங்கள் நகர்வு சென்று கொண்டிருப்பதை காண முடிகிறது.

நீங்கள் வாழ்கின்ற அந்த மண் பலதரப்பட்ட அரசியல் மா மேதைகளை உருவாக்கிய மண் 'படித்த புத்திஜீவிகள் வாழுகின்ற பிரதேசம் அப்படிப்பட்ட மக்கள் உங்களை தெரிவு செய்தது கட்சியின் தலைமைத்துவத்தை திருப்திப் படுத்திக் கொண்டு.   தலைவர் செல்லுவதற்கெல்லாம் தலையாட்டியாக இருப்பதற்கல்ல!

மாறாக மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பேசுவதற்காகவும். இனவாதிகளின் செயற்பாட்டிற்கு எதிராக சமூகத்தை ஒற்றுமையுடன் வழிநடத்தி வெற்றி காண்பதற்குமேயாகும்.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இருந்தால் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் தலைவரே சர்வதிகார முறையில் சமூகத்தைப் பத்தி சிந்திக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது அந்த தலைமைக்கு பின்னால் பயணித்து என்ன பயன் மக்களுக்கு? என்று கேள்வி எழுகிறது.

கட்சி மக்களுக்காக உருவாக்கப் பட்டது. தலைவர் மக்களின் நலன் கருதி தெரிவு செய்யப் பட்டவர்.
ஆனால் இதையல்லாம் இப்போது தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றதை காணக் கூடியதாக இருக்கிறது.

கெளரவ பிரதிமைச்சர் அவர்களே பதவிகளும் பட்டங்களும் கொடுப்பதும் எடுப்பதும் அல்லாஹ் நாடியபடியே நடக்கும்.  அப்படி இருக்கையில் உங்கள் அரசியல் முன்னெடுப்புகள் தலைவரை மட்டுமே திருப்தி படுத்துவதாகப்  அமைவது ஏன் ?

தலைவருக்காக உங்களுக்கு மக்கள் வாக்கு போடவில்லை.  உங்கள் மீதுள்ள நம்பிக்கையினாலே உங்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

மாறாக திறமையற்ற ஆளுமையில்லாத உங்களுக்கு தலைவர் போட்ட பிச்சை என்று நினைத்து விட்டீர்களா? இல்லவே இல்லை.

உங்கள் திறமையையும் மக்கள் செல்வாக்கையும் நன்கு அறிந்து கொண்ட தலைவர் எதிர்காலத்தில் தன்னை விட சிறந்தவராக மக்கள் மத்தியில் வரக்கூடும் என்று புரிந்து கொண்டுதான் உங்களை அடக்கி வாசிக்க வைத்து கொண்டிருக்கிறார்.

ஏன் அவர் ஒரு சில பதவிகளை தந்தார் என்பது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் சிந்திக்க தெரிந்த புத்திஜீவிகளுக்கு நன்றாகவே தெரியும் உங்கள் தலைவர் சானக்கியம் பற்றி

பிரதியமைச்சரே ஊர் மக்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும். வாக்கு போட்ட மக்களின் எதிர்பார்பையும் காணல் நீர் போன்று ஆக்கி விடாதீர்கள்.

உங்கள் மனதை தொட்டு கேளுங்கள் அமைச்சர் சகோதரர் ஹக்கிம் தலைமையில் இத்தனை வருடங்களாகவும் இந்த சமூகத்துக்கு உருப்படியாக நீங்கள் செய்ததுதான் என்ன? அல்லது எவ்விடத்திலாவது உரிமைக்காக குரல் கொடுத்து சாதித்து காட்டிய வரலாறு ஏதுமுண்டா?

மாறாக இழந்தவைகளும் இழந்து கொண்டிருப்பதுதான் மிச்சம். போதாக்குறைக்கு வடகிழக்கு இணைப்புக்கும் தலைவர் சம்மதம் தொரிவித்து விட்டார் மறைமுகமாக என்பதும் அவர்களின் நடவடிக்கையில் இருந்து தெளிவாக புரிகிறது.

"பாம்புக்கு தலையை காட்டி.மீனுக்கு வாலை காட்டுவதாகத்தான்" தலைவரின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்கிறது.

பிரதிமைச்சர் ஹரீஸ் அவர்களே! உங்களிடம் இருக்கும் திறமைக்கும் ஆளுமைக்கும் சமூகத்துக்காக எதிர்த்து நின்று உண்மைக்கு குரல் கொடுக்க முடியும். மக்களும் உங்களை ஒரு சிறந்த அரசியல் வாதியாகத்தான் பார்கிறார்கள்.

ஆகவே இனியாவது தலைவரை மட்டும் திருப்தி படுத்த வேண்டும் என்ற குறுகிய சிந்தனையை தூக்கி வீசி விட்டெறிந்து

தனது மக்கள் படும் கஸ்டங்களிலும் துயரங்களிலும் விடுபட்டு சந்தோசமாகவும் பாதுகாப்பாகவும் இந்த நாட்டில் வாழுவதற்கு குரல் எழுப்புங்கள். உரிமைகளை தட்டி கேழுங்கள். சேவைகளை பெற்றுக் கொடுங்கள். மறைந்த தலைவர் அஸ்ரப் விட்டுச் சென்ற விடயங்களை முன்னெடுத்து செல்லுங்கள். அது வெறும் புகைப்படத்துடன் மட்டும் நின்று விடாமல் செயலிலும் செய்து காட்டுங்கள்.

உண்மையாகவும் நேர்மையாகவும் இதய சுத்தியுடனும்  செயற்பட்டால் மக்களின் ஆதரவும் ஏழைகளின் துஆக்களும் நிச்சயமாக உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.

இல்லாவிட்டால் தலைவர்தான் எல்லாமென தலையாட்டிக் கொண்டு. அரைத்த மாவை மீண்டும் அரைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.



0 comments:

Post a Comment