விற்றுப் பிழைப்பவர்கள்
முன்ஸிப் அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், முன்னொரு காலத்தில் கட்சிக்குள் உணர்வுபூர்வமாக நேசிக்கப்பட்டார். இப்போதும், போராளிகள் என்று கட்சிக்குள் அழைக்கப்படும் அடிமட்ட ஆதரவாளர்கள், அஷ்ரப்பை நெஞ்சுக்குள் வைத்து நேசிக்கின்றார்கள்.
ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்துக்கும், அஷ்ரப் என்கிற பெயர் – ஒரு வியாபாரப் பண்டமாகத்தான் உள்ளது. அஷ்ரப் என்கிற பெயரை விற்று எப்படியெல்லாம் பிழைக்கவும் – உழைக்கவும் முடியுமோ, அவை அனைத்தையும் மு.கா. தலைவரும் அவரின் கூட்டத்தாரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் உயிரோடு இருந்த போது அவரின் ஏராளமான நிகழ்வுகள் வீடியோக்களாக பதியப்பட்டிருந்தன. அவை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸமாமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அவற்றில் ஏராளமானவை தற்போதை தலைவர் ஹக்கீமுக்கு நெருக்கமானவர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது கசப்பான உண்மைகளாகும். அஷ்ரப்பின் தடயங்கள் இருக்கும் வரை, ஹக்கீம் என்கிற நபர் கட்சிக்குள் இரண்டாம் தலைமையாகவே பார்க்கப் படுகிறார் என்கிற மனக்கிலேசத்தினால்தான், அஷ்ரப் பற்றிய மிக முக்கிய தடயங்களெல்லாம் ஹக்கீமுடைய ஆதரவோடு அழிக்கப்பட்டன. இவை – உள் விவகாரங்களாகும்.
ஆனால், வெளியில் அஷ்ரப் என்கிற தலைவனின் பெயரைக் கேட்டாலே கவலையுடன் கண்ணீர் சிந்தும் ஒருவராகத்தான் ஹக்கீம் தன்னைக் காட்டிக் கொள்கின்றார். அப்படிக் காட்டிக்கொண்டால்தான் கட்சிப் போராளிகளின் அன்புக்குப் பாத்திரமாகலாம் என்பது ஹக்கீமுக்குத் தெரியும்.
அதனால், இடைக்கிடையே அஷ்ரப்பின் பெயரைத் தூக்கிப் பிடிப்பது போல் ஹக்கீம் சில நாடகங்களை அரங்கேற்றி வருகின்றமையினைக் காணக்கிடைக்கிறது. அவ்வாறான நாடகங்களில் ஒன்றுதான் ‘நான் எனும் நீ’ என்கிற அஷ்ரப்பின் கவிதை நூல் – மீள் வெளியீடாகும். அண்மையில் மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா’ எனும் நிகழ்வில் வைத்து, ‘நான் எனும் நீ’ என்கிற அஷ்ரப்பின் கவிதை நூல் – மீள் வெளியீடு செய்யப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனையில் நடத்திய ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா’ என்பதே – ஒரு கோமாளிக் கூத்தாகும். ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு’ எனும் தலைப்பில் கொழும்பில் ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 2002ஆம் ஆண்டு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய தலைமையில் ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு’ கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்தது. இம்முறை அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு வந்த கடுப்பு இதுதான். இம்முறை ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு’ அமைச்சர் றிசாட்டின் தலைமையில் நடைபெறவுள்ளதை, ஹக்கீமால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, அந்த விழாவுக்கு முன்னதாக, அதே பெயரில் – தான் ஒரு விழா நடத்த வேண்டும் என்று நினைத்து, மருதமுனையில் நடத்தியதுதான் ‘இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா’ என்கிற கோமாளிக் கூத்தாகும். ஹக்கீமுடைய தலைமையில் – முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய இந்த நிகழ்வு, இரண்டு நாட்கள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சில அரங்குகள் இடம்பெற்றன. ஒவ்வொரு அரங்கிலும் ஆகவும் மிஞ்சிப் போனால், 30 அல்லது 40 பேர் வரையில்தான் பார்வையாளராக வந்திருந்தனர். அவர்களில் முக்கால்வாசிப்பேர் ஹக்கீமும், அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளும்தான். நம்மூரில் பெண்கள் நடத்தும் சங்கத்துக் கூட்டம், இதை விடவும் அதிக சனத்துடன் நடக்கும் என்றார் – அந்த நிகழ்வுக்கு சென்று வந்து நண்பர் ஒருவர்.
அது ஒருபக்கம் கிடக்கட்டும். இன்னொரு கட்டுரையில் அந்தக் கோமாளி விழா பற்றி, விலாவாரியாக எழுதுகிறேன்.
அந்த நிகழ்வில் மீளவும் வெளியிடப்பட்ட ‘நான் எனும் நீ’ என்கிற அஷ்ரப்பின் கவிதை நூல் பற்றித்தான் இந்தக் கட்டுரை பேசப் போகிறது.
அஷ்ரப் உயிரோடு இருக்கும் போது, 1999 ஆம் ஆண்டு ‘நான் எனும் நீ’ என்கிற அவரின் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலின் காப்புரிமை அஷ்ரப்பின் பெயரில் உள்ளது. அதை அந்தப் புத்தகத்தில் காண முடியும்.
அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் – அவருடைய கொள்கைகளையும், அவரின் கட்சியையும், அவருடைய கட்சியின் தலைமையகத்தினையும் விற்றும், கையகப்படுத்தியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இப்போது அவரின் புலமைச் சொத்துகள் மீதும் – மு.கா.வின் தற்போதைய தலைவர் ஹக்கீமும் அவரின் கூட்டத்தாரும் கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
‘நான் எனும் நீ’ அஷ்ரப்பின் புலமைச் சொத்தாகும். ‘நான் எனும் நீ’ எனும் கவிதை நூலின் காப்புரிமை அஷ்ரப்புக்கு உரித்தானதாகும். ஆனால், அஷ்ரப் மரணித்து விட்டார். இப்போது ‘நான் எனும் நீ’ நூலின் காப்புரிமை யாருக்கு உரியது?
இந்தக் கேள்விக்கான விடையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, இலங்கையின் தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தினைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள் தெளிவாக பதில் வழங்கினார்கள். “ஒரு நூலின் ஆசிரியர் அந்த நூலின் காப்புரிமையைக் கொண்டிருக்கும் நிலையில் மரணித்து விட்டால், அவரின் பிள்ளைகளுக்கே அதன் காப்புரிமை சேரும்” என்று, இலங்கையின் தேசிய புலமைச் சொத்து அலுவலக அதிகாரியொருவர் பதிலளித்தார். மேலும் “குறித்த நூலாசிரியரின் பரம்பரையினருக்கு 70 வருடங்கள் இந்தக் காப்புரிமை செல்லுபடியாகும்” எனவும் அவர் கூறினார். அவ்வாறாயின், அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ எனும் நூலின் காப்புரிமை, அவரின் ஏக புதல்வரான அமான் அஷ்ரப்புக்கே உரியதாகும். அமானின் அனுமதியின்றி ‘நான் எனும் நீ’ நூலை மீள் பிரசுரம் செய்வது சட்ட ரீதியாக குற்றமாகும்.
அப்படியென்றால், ‘நான் எனும் நீ’ நூலை மீள் பிரசுரம் செய்வதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர், அமான் அஷ்ரப்பின் அனுமதியைப் பெற்றார்களாக என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அமானைத் தொடர்பு கொண்டு பேசினோம். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அமான் அஷ்ரப்பை நாம் தொடர்பு கொண்டு, இவ்விடயம் குறித்து பேசும் வரை, தன்னுடைய தந்தையின் நூல், மறு பிரசுரம் செய்யப்பட்ட செய்தியை அவர் அறிந்திருக்கவேயில்லை.
“எனது தந்தையின் மரணத்துடன் எங்கள் குடும்பத்தை மு.காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் ஓரங்கட்டி விட்டன. ஆகக் குறைந்தது எங்கள் தந்தை தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் போது கூட, அவர்கள் எங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை. எனது தந்தையின் ‘நான் எனும் நீ’ நூல், மீள் பிரசுரம் செய்யப்பட்டமை குறித்து, நீங்கள் கூறியே நான் அறிகிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது எனது தந்தையின் புத்தகத்தை மீள் பிரசுரம் செய்வது குறித்து – அவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்” என்றார்.
ஆக, ‘நான் எனும் நீ’ என்கிற – அஷ்ரப்பின் கவிதை நூலினை மீள் பிரசுரம் செய்வது குறித்து, அமான் அஷ்ரப்பின் முன்கூட்டிய அனுமதியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டோம். அப்படியென்றால், மு.காங்கிரஸ் செய்தது சட்ட ரீதியானதொரு குற்றமாகும்.
சிலவேளை, அஷ்ரப்பின் பாரியார் பேரியல் அஷ்ரப்பிடம் ‘நான் எனும் நீ’ நூலை மீள்பிரசுரம் செய்வதற்கான அனுமதியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கலாமல்லவா? எதற்கும், பேரியல் அஷ்ரப்புடனும் ஒரு தடவை – இது குறித்து விசாரித்து விடுவோம் என நினைத்து, அவரின் தொலைபேசியை அழைத்தோம். தனது கணவரின் நூல் – மறு வெளியீடு செய்யப்பட்ட செய்தி அவருக்கும் புதிய செய்தியாகவே இருந்தது. எப்போது இது நடந்தது என்று கேட்டார். விபரம் கூறினோம். தன்னிடம் தெரிவிக்காமல் அவர்கள் அப்படிச் செய்தமை தவறு என்றார்.
இப்போது, உறுதியாயிற்று. புலமைச் சொத்துரிமைச் சட்டத்தை மீறி, அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ நூலினை மு.காங்கிரஸ் மீள் பிரசுரம் செய்திருக்கிறது. இது சட்டப்படி குற்றமாகும். இப்படியான பிழைகளை மு.கா. செய்கின்றமை – இது முதல் தடவையல்ல. இதற்கு எதிராக அமான் அஷ்ரப் நீதிமன்றம் செல்ல முடியும். அமான் அஷ்ரப் சார்பாக வேறொருவர் கூட, இந்தப் புலமைத் திருட்டுக்கு எதிராய் வழக்கொன்றினைத் தாக்கல் செய்யலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் மீள் பிரசுரம் செய்த, அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ என்கிற கவிதை நூல், காசுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. மருதமுனையில் மு.காங்கிரஸ் நடத்திய இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழாவில் – பேராளர்களாகக் கலந்து கொண்டவர்களுக்கும் இந்த நூலின் இலவசப் பிரதிகள் வழங்கப்படவில்லை என்று, பல பேராளர்கள் ஆத்திரத்துடன் அந்த நிகழ்விலிருந்து திரும்பியிருந்தனர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா என்கிற கோமாளிக் கூத்தும், அதில் அரங்கேற்றப்பட்ட அஷ்ரப்பின் ‘நான் எனும் நீ’ நூலின் மீள் வெளியீடும், மொத்தத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே லாபமாக அமைந்தது. அவர்களின் சட்டைப் பைகள் மட்டுமே நிரப்பின.
மு.கா. போராளிகளே, நீங்கள் நேசிக்கும் அஷ்ரப் என்கிற உங்கள் தலைவனை எப்படியெல்லாம் விற்றுப் பிழைக்கிறார்கள் என்பதை – நீங்கள் முழுவதுமாக அறியும் போது, பலர் நடுத் தெருவில் நிற்க நேரிடும்.
அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
.

Tuesday, December 27, 2016
Home »
»
Related Posts:
Colombo High Court grants bail to Fmr. UNP General Secretary The Colombo High Court granted bail to former General Secretary of the United National Party Tissa Attanayake, who was in remand custody. Tissa Attanayake was… Read More
இவ்வாட்சிக்கு சோரம் போன மு.கா பிரதிநிதிகள் (அபு றஷாத்) இவ்வாட்சியை கொண்டு வருவதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அபரிதமானதென்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது.இலங்கை முஸ்லிம்கள் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களிடமிருந்த… Read More
Woman’s body found in Bolgoda River The body of a 35-year-old woman was found in the Bolgoda River near the Panadura Railway Station today, Police said. The cause of the victim’s death and her identity had not been ascerta… Read More
வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத் (இப்றாஹிம் மன்சூர்) அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் … Read More
தனது மௌனத்திற்கான காரணத்தை தோப்பூரில் வலுப்படுத்திய ஹக்கீம் (இப்றாஹிம் மன்சூர்) இலங்கையில் இனவாதம் மிக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.தற்போது இவ்வரசின் மீது பலத்த விமர்சனங்கள் முஸ்லிம் தரப்புக்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கி… Read More
0 comments:
Post a Comment